நெடுஞ்சாலைத்துறை முறைகேடு.. எடப்பாடிக்கு எதிராக இறுகும் பிடி? லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை: அதிமுக ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் தற்போது இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் நெருக்கமானவர்கள் மற்றும் எஸ்பி வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊழல் தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு தெரிவித்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை தொடர்பாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ரூ.2000 கோடி செலவில் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் கோவை, தஞ்சை, ஒக்கடம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது, சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு சுமார் ரூ.2000 கோடி செலவில் ஒப்பந்த பணிகளானது அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக டெண்டர்களும் விடப்பட்டு பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.2,000 கோடி சாலை ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை இதில் விரிவான விசாரணை மேற்கொண்டது. இதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊழல் தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து தற்போது முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் நெருக்கமானவர்கள் மற்றும் எஸ்பி வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஜெகதீசன் என்பவர் தகுதியே இல்லாத ஒரு நிறுவனத்திற்கு அனுபவ சான்றிதழ் வழங்கி அதன் மூலமாக இந்த ஒப்பந்த பணிகள் பெறுவதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
ஆர். ஆர். இன்ப்ரா, ஜேஎஸ்வி இன்ப்ரா, கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளது. மொத்தம் 20 கோடி இழப்பு ஏற்படுத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. ஆர்.ஆர் இன்ப்ரா ரூ.1.65 கோடியும், ஜேஎஸ்பி நிறுவனம் ரூ.8.5 கோடியும் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications