“மாட்டிக்கினாரு ஒர்த்தரு”.. போலீஸ் பாதுகாப்புக்காக பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி கைது!
கோவை: கோவையில் இளைஞர் தன்னை போட்டோ எடுத்ததாக கூறி அவரது செல்போனை பறித்து மிரட்டி, புகார் அளித்த இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் செல்வபுரம் இந்து முன்னனி நகரத் தலைவராக பொறுப்பு வகிப்பவர் சூர்ய பிரசாத் (28). இவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி செல்வபுரம் பகுதியில் மீன் கடை நடத்தி வரும் அசாருதீன் என்பவர் தன்னை செல்போனில் படம் எடுத்ததாக கூறி அவரை மிரட்டி செல்போனை பறித்து, தனது உயிருக்கு ஆபத்து எனக் கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார்.

போலீசார் அந்த செல்போனை ஆய்வு செய்த போது, அந்த செல்போனில் அப்படி சூர்ய பிரச்சாத்தின் போட்டோ, வீடியோ ஏதும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, சூர்ய பிரசாத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது தனி பாதுகாவலர் வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய நபரை மிரட்டி செல்போனை பறித்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறி போலீசில் பொய் புகார் அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து அசாருதீன் அளித்த புகார் அடிப்படையில் இந்து முன்னனி பிரமுகர் சூர்ய பிரசாத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வபுரம் போலீசார் சூர்ய பிரசாத்தை கைது செய்தனர். தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர் மீது இந்து முன்னணி பிரமுகர் பொய் புகார் அளித்து நாடகமாடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications