சென்னையில் ரவுடியை சுட்டு பிடித்த "பெண் எஸ்ஐ.." தப்ப முயன்றதால் துப்பாக்கிச்சூடு.. காலையிலேயே பரபரப்பு
சென்னை: சென்னையில் பிரபல ரவுடி ரோகித் ராஜை பெண் போலீஸ் எஸ்ஐ கலைச்செல்வி துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். இதில் காயமடைந்த ரவுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல ரவுடி சிவக்குமார் கொலை உள்பட 3 கொலை வழக்குகளில் ரோகித் ராஜுக்கு தொடர்பு உள்ளது. இன்று போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோதுதான் பெண் எஸ்ஐ சுட்டு பிடித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே கல்லறைசாலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபல ரவுடி ரோகித் ராஜ் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அப்போது பெண் எஸ்ஐ கலைச்செல்வி துரிதமாக செயல்பட்டு ரவுடி ரோகித் ராஜின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

ரவுடி ரோகித் ராஜ்: சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ரோகித் ராஜ். இவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. ரவுடி ரோகித் ராஜ் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 13 வழக்குகள் உள்ளன. சென்னை அமைந்தகரை, அண்ணா நகர் காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளன.
3 கொலை வழக்குகள்: மயிலாப்பூர் சிவக்குமார், பிபிசி முருகன், பைனான்சியர் ஆறுமுகம் ஆகிய 3 கொலைகளை ரவுடி ரோகித் ராஜ் நடத்தியதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. குறிப்பாக பைனான்சியர் ஆறுமுகம் என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு செனாய் நகரில் வைத்து பட்டப்பகலில் வெட்டி கொலை செய்ததும், இதேபோன்று கடந்த 2021 ஆம் ஆண்டு மயிலாப்பூர் பிரபல ரவுடி சிவக்குமாரை இவர் தான் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதேபோன்று கடந்த 2017 ஆம் ஆண்டு முருகன் என்பவரையும் ரவுடி ரோகித் ராஜ் தான் கொலை செய்திருப்பது போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது. இது போக மேலும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து இருந்தனர். இப்படி பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரோகித் ராஜ் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
தேனியில் கைது: இந்தநிலையில் தான் ரவுடி ரோகித் ராஜ் தேனியில் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்திற்கு சென்றனர். அங்கு பதுங்கியிருந்த ரவுடி ரோகித் ராஜை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ரவுடி ரோகித் ராஜை சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று அவரை கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்வதற்காக விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
தப்பி ஓட முயற்சி: அப்போது சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை சாலை அருகே சென்றபோது ரவுடி ரோகித் ராஜ் திடீரென போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதனால் போலீசார் அவரை விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் போலீசாரை கத்தியால் தாக்க முயற்சித்தார். இதனால் தற்காப்பிற்காக எஸ்ஐ கலைச்செல்வி அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
ஆஸ்பத்திரியில் அனுமதி: இதையடுத்து அவரால் ஓட முடியாமல் கீழே விழுந்தார். இதன் பின்னர் போலீசார் சிகிச்சைக்காக அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ரோகித் ராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் போலீசை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை போலீஸ் எஸ்ஐ சுட்டு பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரவுடியை துணிச்சலுடன் சுட்டு பிடித்த பெண் எஸ்ஐ கலைச்செல்விக்கு காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார். எஸ்ஐ கலைச்செல்வியை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications