சென்னையில் 7 பள்ளிகளுக்கு நாளை லீவ்.. மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். சென்னை புரசைவாக்கம் கங்காதீசுவர் கோவில் தேரோட்டம் நடைபெறுவதால் இந்த விடுமுறை விடப்படுவதாகவும், நாளை இப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கங்காதீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய 2 தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடக்கிறது.

இதன் காரணமாக கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள கங்காதீசுவரர் மேல்நிலைப்பள்ளி, இ.எல்.எம். பள்ளி, எம்.சி.டி.எம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்.சி.டி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அழகப்பா மேல்நிலைப்பள்ளி, இவாட்ஸ் பள்ளி, வெள்ளாளர் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி உட்பட 7 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) மேற்கூறிய பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேரோட்டம் நடக்கும் கங்காதீசுவரர் கோயில் நுழைவாயில் - கங்காதீசுவரர் கோவில் வீதி, டாக்டர் அழகப்பா சாலை, ஆடியப்பா தெரு, வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சுமூக விநாயகர் கோவில் சந்திப்பு, கங்காதீசுவரர் கோவில் நுழைவாயில் வழியாக காலை 6 மணியிலிருந்து பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று போக்குவரத்து போலீசார் கூறி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications