வான் பிறை தெரிந்தது.. தமிழகத்தில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்
சென்னை: வானில் வெள்ளிக்கிழமை பிறை தென்பட்டதால் ரமலான் நோன்பு இன்று சனிக்கிழமை முதல் தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், இரவு நேர சிறப்புத் தொழுகை(தராவீஹ்), இஃப்தார் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் வீடுகளில் இருந்தவாறு இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசின் தலைமை காஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டது. அதை பின்பற்றி இந்தியாவில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கூட வெள்ளிக்கிழமையன்று நோன்பு கடைபிடிக்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை இரவு வானில் பிறைபார்க்கப்பட்டு ரமலான் மாதத்தின் முதல் நோன்பு இன்று சனிக்கிழமை முதல் கடைபிடிக்கப்படுகிறது.
இதனிடையே இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துச் செய்தி வெளியிட்ட சவுதி அரேபியா மன்னர் சல்மான், இம்மாதத்தில் தீமைகள் அகல இறைவனை பிரார்தித்து தான தர்மங்களை அதிகரித்து நல்வழியை பின்பற்றி வாழவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மெக்கா, மதீனா மற்றும் பள்ளிவாசல்களில் இம்மாதம் தொழுகையில் பங்கேற்க முடியாததை எண்ணி மக்கள் எப்படி வேதனை அடைகிறீர்களோ, அதைப்போலவே தானும் வேதனையும், துயரமும் அடைவதாக சவுதி மன்னர் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

இதனிடையேதமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை அமைப்பும், அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளதால் அதனை பின்பற்றி வணக்க வழிபாடுகளை வீடுகளிலேயே செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
