தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.. எடப்பாடி ஆவேச பேட்டி
சென்னை: திமுக ஆட்சி காலத்தில் எங்கும் எதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2 ஆண்டு கால திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கும் திருடர்களுக்கும் பயம் விட்டுப்போய் விட்டதாகவும் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி புகார் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்த பின்னர் காட்டமாக பேட்டி அளித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயத்தால் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, திமுக ஆட்சி தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக இன்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெறுகிறது.

அதன்படி, வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் அதிமுகவினர் ஒன்றிணைந்தனர். அங்கிருந்து சின்னமலை தாலுகா அலுவலக சாலை வழியாக பேரணியாக ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். ரவுடிகள், திருடர்கள் பயமின்றி வீதிகளில் உலா வருகின்றனர். வயதானவர்களை குறி வைத்து கொலை கொள்ளை நடைபெறுகிறது.
கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்துள்ளது. 25 பேர் உயிரிழந்த பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுகின்றனர். எங்கும் எதிலும் ஊழல் மலிந்துள்ளது. வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்தவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். போலி மதுபானத்தில் இரண்டு பேர் இறந்ததை மறைக்க தவறான தகவல் தருகின்றனர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தாங்கள் அளித்துள்ள புகார் மனுவை பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அதிமுகவினரின் பேரணியால் சென்னை சைதாப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆளுநர் மாளிகை நோக்கி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக வந்ததால் கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகினர்.












Click it and Unblock the Notifications