இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைக்கும் வெங்காயம் விலை .. எகிறும் வீட்டு பட்ஜெட்.. எப்போது விலை குறையும்
சென்னை: வரத்து குறைவு காரணமாக, பெரிய மற்றும் சின்ன வெங்காயம் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் பசுமை பண்ணை காய்கறி கடைகளில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடு கிடு வென உயர்ந்தது. கடந்த மாதங்களில் தக்காளியின் விலை உயர்ந்து பொதுமக்கள் இல்லத்தரசிகள் திண்டாடிய நிலையில் படிப்படியாக குறைந்தது. தற்போது வெங்காயத்தின் விலையும் உயரந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் சில்லறை விலையில் 90 ரூபாய் ஆகவும், சின்ன வெங்காயம் 160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் ரூ.40, ரூ.50 என்ற விலையில் விற்பனையாகி கொண்டிருந்த வெங்காயத்தின் விலை இப்போது ரூ.100 அல்லது அதற்கும் மேல் விற்பனையாகிறது.
நாடெங்கிலும் உள்ள இல்லத்தரசிகள் வெங்காயத்தின் விலை உயர்வை கண்டு மலைத்துப் போய் நிற்கின்றனர். வெங்காய விலை உயர்வுக்கு ஒற்றைக் காரணத்தை குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. உற்பத்தியில் தாமதம், தேவைக்கேற்ற விநியோகத்தில் பற்றாக்குறை என பற்பல காரணங்களால் வெங்காயத்தின் விலை உயருகிறது. குறிப்பாக வெங்காயத்தை விளைவிக்கும் விவசாயிகள் பலர், அதனை நல்ல லாபத்திற்கு விற்க வேண்டும் என்று ஏற்றுமதிக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படுகிறது
தற்போது உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளதால் ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது.வெங்காய சாகுபடி பணிகளை விவசாயிகள் தாமதமாக மேற்கொள்வதும் இத்தகைய விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. வானிலை சாதகமாக இல்லாத காரணத்தால் பயிர் சாகுபடியை விவசாயிகள் தள்ளி வைக்க நேரிடுகிறது என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அறுவடையும் தள்ளிப் போகும் நிலையில், அதன் எதிரொலியாக விலை உயர்ந்து விடுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெங்காயம் மொத்த விற்பனைக்கென தனியாக மார்க்கெட் செயல்படுகிறது. திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாட்கள் செயல்படும் வெங்காய மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், தேனி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
பெரிய வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் இருந்து திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சில்லறை விற்பனை செய்யும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். சின்ன வெங்காயம் விளைச்சல் முடிவுற்ற நிலையில், விவசாயிகள் தற்போது புதிதாக வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.
தேவை அதிகரித்தபோதும் மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்துப் போதுமானதாக இல்லை. இதனால் வெங்காயம் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனையாகிறது. வெளி மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் ரூ.90 வரை விற் பனை செய்கின்றனர்.
இதேபோல் வடமாநிலங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப் படும் பெரிய வெங்காயம் வரத்தும் குறைந்துவிட்டது. இதனால் பெரிய வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.75 வரை விற்பனையாகிறது.
சின்ன வெங்காயப் பற்றாக் குறையால் பெரிய வெங்காயத்தின் தேவை அதிகரித்து அதன் விலையும் உயர்ந்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்த 40 சதவிகித வரி தொடர்வதால், ஏற்றுமதி குறைந்தபோதிலும் உள்ளூர் மார்க்கெட்டுகளில் விலை குறையாத நிலை தொடர்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதால் பதுக்கலும் அதிகரித்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கும் காரணமாக இருக்கிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் கிலோ வெங்காயம், 200 ரூபாயை எட்டும் என, கணிக்கப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் வெங்காயம் விலை உயர்ந்து வருவது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. பசுமை பண்ணை காய்கறி கடைகள், ரேசன் கடைகள் மூலம் வெங்காய விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications