கண்டம் 1 டூ 4.. எடப்பாடியை 4 திசையிலும் சுற்றி வளைத்த "சுழல்".. விடமாட்டேன்.. ஸ்டாலினின் உறுதிமொழி
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 4 முக்கியமான கண்டங்கள் உருவாகி உள்ளன.
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு அறிக்கையும் தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு 4 விதமான கண்டங்கள் ஏற்பட்டு உள்ளன.

கண்டம் 1 - தூத்துக்குடி
எடப்பாடிக்கு காத்திருக்கும் முதல் கண்டம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நேரடியாக தமிழ்நாடு போலீஸ் தவறு செய்து உள்ளதாக ரிப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அருணா ஜெகதீசன் குழு வெளியிட்ட அறிக்கையில், ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்டாலின்
இந்த நடவடிக்கை அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்ததுதான் நடந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. எடப்பாடிக்கு இந்த துப்பாக்கி சூடு பற்றி நொடிக்கு நொடி விவரம் சென்றதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் கண்டிப்பாக போலீசாரை கட்டுப்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டில் எடப்பாடி மீது வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. நேற்று இதை பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடி இதில் முழுக்க முழுக்க பொய்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
கிராமத்து பக்கம் கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்துவிட்டேன் என்று கூறும் பழமொழியை விட மிகப்பெரிய பொய் கூறியுள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதன்பின் பல்வேறு திமுக எம்எல்ஏக்கள் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அதோடு இதில் குற்றம் செய்தவர்களை கூண்டில் ஏற்றாமல் விட மாட்டேன் என்றும் ஸ்டாலின் சபதம் செய்து இருக்கிறார். இதனால் தூத்துக்குடி வழக்கில் எடப்பாடி பழனிசாமி குறி வைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவருக்கு இருக்கும் முதல் கண்டம் இது.

கண்டம் 2 - கொடநாடு வழக்கு
இந்த நிலையில்தான் தற்போது கோடநாடு வழக்கில் விசாரணை சூடு பிடித்துள்ளது. . கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை தீவிரமாக நடத்த தமிழ்நாடு போலீஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக அண்டை மாநிலங்களுக்கு செல்லவும் தமிழ்நாடு போலீஸ் தயாராகி வருகிறது. வழக்கு சிபிசிஐடி கைக்கு சென்றுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகள் மற்றும் சாட்சியங்களில் ஒருவரான சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

சயான் வாக்குமூலம்
வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் அளித்ததாக வெளியாகும் செய்திகள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ள நிலையில்தான் அண்டை மாநிலங்களுக்கு சென்று இந்த வாக்குமூலம் தொடர்பாக விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளது. இது எடப்பாடிக்கு இருக்கும் இரண்டாவது பெரிய கண்டம்.

கண்டம் 3 - பொதுக்குழு வழக்கு
அதிமுக பொதுக்குழு வழக்கும் அவருக்கு இருக்கும் இன்னொரு கண்டம் ஆகும். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் விசாரணை நடத்த உள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் நீதிபதிகள் முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் அளித்த விளக்கத்தில்,எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களுக்கே மெஜாரிட்டி இருப்பதாக வாதம் வைத்தது. ஆனால் நாங்கள் மெஜாரிட்டி பற்றி ஆராய போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. மெஜாரிட்டி யாருக்கு இருக்கிறது என்பது எங்கள் கவலை இல்லை. பொதுக்குழு எப்படி கூடியது என்பதே எங்கள் கவலை.

வழக்கு சிக்கல்
பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டதா என்பதை வழக்கில் ஆராய போகிறோம் என்று நீதிபதிகள் கூறி உள்ளனர். அதாவது மெஜாரிட்டி பற்றி கவலைப்பட போவது இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இடியாக வந்து இருக்கும் செய்தி. ஏனென்றால் அதிமுக சட்டப்படி பொதுக்குழுவை ஒருங்கிணைப்பளார், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே கூட்ட முடியும். இவர்களின் பதவிக்காலம் காலாவதி ஆகிவிட்டது என்று எடப்பாடி வாதம் வைக்க முடியாது. இது எடப்பாடிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கண்டம் 4 - ரெய்டு
இன்னொரு பக்கம் எடப்பாடியின் உறவினர் காண்டிராக்டர் செய்யாதுரை வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு கவனம் பெற்றுள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் எடப்பாடிக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் காய் நகர்த்தப்படலாம். எடப்பாடிதான் அரசு ஒப்பந்தங்களை அத்துமீறி கொடுத்ததாக புகார் உள்ளது. இதனால் இந்த வழக்கிலும் எடப்பாடிக்கு மிகப்பெரிய கண்டம் காத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications