செம.. புலனாய்வுனா இதுதான்! 28 ஆண்டுக்கு பின் கைதான கொலையாளி.. அசத்திய சென்னை போலீஸ்.. எப்படி?
சென்னை: சென்னையில் கடந்த 1995ம் ஆண்டு மாமியாரை கொலை செய்துவிட்டு மனைவி மற்றும் அவரது சகோதரரை கத்தியால் குத்திவிட்டு 28 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த கொலையாளியை சென்னை போலீசார் அதிரடியாக ஒடிசாவில் கைது செய்துள்ளனர். கொலையாளி குறித்த முக்கிய விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் ஒரேயொரு பிளாக்அன்ட் ஒயிட் பழைய போட்டோவை வைத்து புலனாய்வு செய்து சென்னை போலீசார் வெற்றி பெற்றுள்ளனர்.
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது பழமொழி. அதாவது தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வரும் நபர் என்றாவது ஒருநாள் கையும், களவுமாக போலீசிடம் சிக்குவான் என்பதற்காக இந்த பழமொழியை சொல்வார்கள்.
அதேபோல் தான் திருட்டு, கொலை உள்ளிட்டவற்றில் ஈடுபடும் நபர் ஏதாவது தடயங்களை விட்டு செல்வதும், அதன் பிறகு அந்த தடயங்களை வைத்து போலீசார் புலனாய்வு செய்து குற்றவாளியை கைது செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.

இருப்பினும் சில குற்ற சம்பவங்களை பொறுத்தமட்டில் குற்றவாளியை கண்டுபிடிப்பது என்பது பெரிய சிரமமாக இருக்கும். அப்படியான ஒரு கொலை வழக்கு தான் சென்னை ஆதம்பாக்கம் போலீஸ் நிலையில் 28 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. அதாவது 1995ம் ஆண்டு மாமியாரை கொன்றுவிட்டு மனைவி, மனைவியின் சகோதரரை கத்தியால் குத்திவிட்டு தப்பியவர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த நிலையில் அவரை தான் தற்போது சென்னை போலீசார் அதிரடியாக தட்டித்தூக்கி உள்ளனர். இது எப்படி சாத்தியமானது? சென்னை போலீசார் எப்படி அவரை கைது செய்தனர்? என்பது பற்றிய விபரம் வருமாறு:
ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டம் பெர்ஹாம்பூரை சேர்ந்தவர் ஹரிஹரபட்டா ஜோஷி (வயது 53). இவர் கடந்த 1993ம் ஆண்டு சென்னைக்கு வேலைக்கு வந்தார். சென்னை நங்கநல்லூரில் உள்ள தில்லை கங்கா நகரில் அவர் தங்கி வேலை செய்து வந்தார். அதன்பிறகு கடந்த 1994ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி ஹரிஹர பட்டா ஜோஷிக்கு திருமணம் நடந்தது. அவரது மனைவி பெயர் இந்திரா. துவக்கத்தில் இருவரும் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கினர்.
அதன்பிறகு இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. மனஸ்தாபம் வந்த நிலையில் இந்திரா தனது கணவர் ஹரிஹர பட்டா ஜோஷியை பிரிந்து தாய் ரமாவின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த அவர் ஹரிஹரபட்டா ஜோஷியிடம் விவாகரத்து கேட்டார். இது ஹரிஹர பட்டா ஜோஷிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் தனது மனைவி இந்திரா மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதையடுத்து கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி ஹரிஹர பட்டா ஜோஷி மாமியார் ரமாவின் வீட்டுக்குள் நுழைந்து மனைவி இந்திராவை கத்தியால் குத்தினார். இதை பார்த்தவுடன் இந்திராவின் சகோதரர் கார்த்திக், தாய் ரமா தடுக்க சென்றார். அவர்களுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்திரா, கார்த்திக் ஆகியோர் கத்திக்குத்து காயங்களுடன் தப்பிய நிலையில் மாமியார் ரமா இறந்தார். இதையடுத்து ஹரிஹரபட்டா ஜோஷி தலைமறைவனார்.
இதுபற்றிய புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரபட்டா ஜோஷியை தீவிரமாக தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் போலீசாரிடம் சிக்கவில்லை. இதற்கிடையே தான் ஹரிஹர பட்டா ஜோஷி தனது 28 வயதில் எடுத்த ‛பிளாக்அன்ட் ஒயிட்' போட்டோ போலீசாருக்கு கிடைத்தது. அதோடு அவரது முகவரியும் கிடைத்தது. இதையடுத்து அவரது சொந்த ஊரான ஒடிசா மாநிலத்தில் போலீசார் 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் போய் தேடிப்பார்த்தனர். அப்போது ஹரிஹரபட்டா ஜோஷி சிக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு முடிக்கப்படாமலேயே கிடப்பில் இருந்தது.
இந்நிலையில் தான் மீண்டும் தனிப்படை போலீசார் ஒடிசா மாநிலத்துக்கு சென்றனர்.கஞ்சம் மாவட்டத்தின் எஸ்பி சரவணன் விவேக் உதவியை கோரினர். இதையடுத்து அவரது அறிவுரையின்படி பெர்ஹாம்பூர் போலீஸ் நிலைய போலீசார் உதவியுடன் ஹரிஹர பட்டா ஜோஷி பற்றி விசாரித்தனர். சிறிய வயதில் எடுத்த போட்டோ என்பதால் ஹரிஹரபட்டா ஜோஷியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தபால்காரராக வேலை செய்து ஓய்வு பெற்றவரிடம் இதுதொடர்பாக விசாரித்தனர். அப்போது ‛பட்டா ஜோஷி' என்ற பெயரில் பிராமிண் குடும்பம் வசித்தாக அவர் தெரிவித்தார். இது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
மேலும் அந்த ஓய்வு தபால்காரர் தனக்கு தெரிந்த ஒருவரின் முகவரியை போலீசாரிடம் வழங்கினர். போலீசார் அங்கு சென்று அந்த முகவரியில் இருப்பவரிடம் விசாரித்தனர். அப்போது அது ஹரிஹர பட்டா ஜோஷியின் பள்ளி பருவ தோழர் என்பது தெரியவந்தது. இது 2வது திருப்பமாக அமைந்தது. அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது ஹரிஹர பட்டா ஜோஷிக்கு சொந்தமான வீடு பெர்ஹாம்பூரில் உள்ளதாகவும், வழக்கு நடப்பதால் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வழக்கு பற்றிய விபரங்களை சேகரித்தனர். அப்போது ஹரிஹர பட்டா ஜோஷியின் சகோதரி சார்பில் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இ-கோர்ட் பதிவு மூலம் போலீசார் ஹரிஹர பட்டா ஜோஷியின் முகவரியை கண்டுபிடித்தனர். போலீசார் விசாரிப்பதை அறிந்த ஹரிஹர பட்டா ஜோஷி செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து பெர்ஹாம்பூரில் உள்ள நண்பரின் வீட்டில் அவர் ஒழிந்து கொண்டார். இதனால் அவரை கைது செய்ய முடியவில்லை. இறுதியாக லோக்கல் போலீசாரின் உதவியுடன் ஹரிஹர பட்டா ஜோஷியின் 2வது மனைவியின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து அவரை போலீசார் 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்தனர்.
ஹரிஹர பட்டா ஜோஷியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் கொலை செய்த பிறகு ஹரிஹர பட்டா ஜோஷி கர்நாடகா மாநிலம் பெங்களூர் மற்றும் குஜராத் மாநிலம் சூரத்தில் 6 ஆண்டு வேலை செய்துள்ளார். அதன்பிறகு அவர் பெர்ஹாம்பூரில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசிக்க தொடங்கிய நிலையில் போலீசார் தற்போது அவரை தட்டித்தூக்கி உள்ளனர். கைதான ஹரிஹர பட்டா ஜோஷியை போலீசார் ரயில் மூலம் சென்னை ஆலந்தூர் அழைத்து வந்து ஜூடிசியல் மாஸ்திரேட்டு III வது நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதுபற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ராதோர் கூறுகையில், ‛‛இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் எஸ்பி சரவணன் விவேக் உதவி செய்தார்'' என்றார். அதேபோல் சரவணன் விவேக்கை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications