காலில் வடிந்த திரவம்.. அப்படியே ரத்தத்தில் கலந்து.. மாணவி பிரியா பலியானது எப்படி? நடந்தது என்ன?
சென்னை: கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா பலியான நிலையில் அவரின் உடலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டன என்று மருத்துவத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மாணவி பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவர் மாணவிகள் இடையே மிகவும் பிரபலம்.
சிறப்பாக கால்பந்து விளையாடுவார் என்பதால் மாணவிகள் இடையே ரோல் மாடல் போல இவர் வலம் வந்துள்ளார்.

காலில் வலி
இந்த நிலையில்தான் கால் பந்து விளையாடும் போது இவருக்கு காலில் அடிக்கடி வலி ஏற்பட்டு உள்ளது. அதில்தான் அவருக்கு தசை பிடிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காலில் தசை பிடிப்பு இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். சவ்வு அவருக்கு விலகிவிட்டதாக மருத்துவர்கள் இதில் கூறி உள்ளனர்.

சவ்வு
இதையடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய அவருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதன்படியே அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சவ்வு பாதிப்பு சரி செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவருக்கு வலி இருந்துள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகரித்துள்ளது.

பயங்கர வலி
திடீரென உயிரே போகும் அளவிற்கு அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் செய்யப்பட்ட சோதனையில், கால் அழுகியது கண்டுபிடிக்கப்பட்டது. சவ்வில் இருந்து திசுக்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளன. இதனால் காலை உடனே அகற்ற வேண்டும். இல்லையென்றால் மற்ற பாகங்களுக்கு பாதிப்பு பரவும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உயிர் முக்கியம்
காலை விட உயிர் முக்கியம் என்பதால் அவருக்கு அவசரமாக சிகிச்சை வழங்கப்பட்டது. பிரியாவின் அனுமதியோடு காலும் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட மாணவி பிரியா இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பலியானார். அவர் மரணம் அடைந்தது எப்படி என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. அதன்படி, சென்னை அரசு மருத்துவமனையில் கவனக்குறைவால் மாணவி பலியாகி இருக்கிறார்.

கால் வெட்டு
கால் நீக்கப்பட்ட பின் அதில் கட்டு போட்டுள்ளனர். இந்த கட்டை மிக மிக இறுக்கமாக இவர்கள் போட்டுள்ளனர். இந்த இறுக்கம் காரணமாக ரத்தம் அங்கேயே கட்டி உள்ளது. அதோடு கட்டு இறுக்கமாக இருந்ததோடு தசை கிழிந்தது. இதனால் அங்கே சீல் வைக்க தொடங்கி உள்ளது. கட்டு உள்ளே சீல் வைத்ததால் மருத்துவர்கள் இதை கவனிக்கவில்லை.

திரவம்
இதையடுத்து காலில் இருந்து ஒருவகை திரவம் கசிய தொடங்கி உள்ளது. காயத்தின் உள்ளே திரவம் கசிந்து உள்ளது. கட்டுக்கு உள்ளே திரவம் இருந்ததால், மாணவி மரணம் அடையும் வரை உள்ளே என்ன நடந்தது என்று தெரியாமல் போய் உள்ளது. இந்த திரவம் பின்னர் ரத்தத்தில் கலந்து உள்ளது. அந்த திரவம் ரத்தம் வழியாக மற்ற உடல் பாகங்களுக்கும் சென்று உள்ளது.

என்ன நடந்தது
இதில் ரத்தம் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் செயலிழந்துள்ளது. சிறுநீரகத்தை தொடர்ந்து மற்ற உறுப்புகள் வேகமாக அழுக தொடங்கி உள்ளன. ஈரல் மற்றும் இதயம் ஆகியவையும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதான் கடைசியில் அந்த மாணவியின் மரணத்திற்கும் காரணமாக அமைந்து உள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications