Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘மைக்’ மோகனாக மாறியது எப்படி? திடீரென்று சினிமாவை விட்டு விலகியது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீரென்று தமிழ் சினிமாவை விட்டு விலகியது ஏன்? அதற்கான காரணம் என்ன என்பது பற்றி நடிகர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மறக்கவே முடியாத நடிகர் மோகன். 1980கள் தொடங்கி 1990கள் வரை கொடி கட்டி பறந்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் நாயகன். இவர் படங்கள் மட்டும் இல்லை. இவரது படங்களின் ஆடியோ விற்பனை கூட அமோகம். மோகன் எனச் சொல்வதைவிட ஒரு கட்டத்திற்குப் பிறகு 'மைக்’ மோகன் எனப் புகழப்படும் அளவுக்குப் பாடல்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப திரையில் உணர்வுகளை வெளிப்படுத்தியவர்.

Actor Mohan Ilayaraja

அதனால்தான் எஸ்பிபியே நடித்த நடிகர்களிலேயே மோகன் தான் பெஸ்ட் எனச் சான்றிதழ் கொடுத்திருந்தார். திரையுலகில் உச்சகட்ட புகழிலிருந்த இவர் திடீரென்று நடிப்பதைத் தவிர்த்தார். படங்களைக் குறைக்கத் தொடங்கினார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் தேடினார்கள். கடந்த சில மாதங்கள் முன்பாக இவரது 'ஹரா' திரைப்படம் வெளியானது. மீண்டும் இவரது வருகை பலரிடம் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்துள்ளார். இந்தக் காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். திரைத்துறையில் இல்லை என்றாலும் தொடர்ந்து படங்களை விடாமல் பார்த்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மைக் மோகனாக மாறிய கதையைக் கூறியுள்ளார்.

நடிகர் மோகன் பேசும்போது, “எனக்குச் சொந்த ஊர் என்றால் அது பெங்களூருதான். 1979இல் சினிமாவில் நடிப்பதற்காகச் சென்னைக்கு வந்தேன். அதற்குப் பிறகு நான் சொந்த ஊருக்குப் போகவே இல்லை. இங்கேதான் இருக்கிறேன். அந்தளவுக்குப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் இங்கேயே தங்கிவிட்டேன். பாலுமகேந்திரா தான் என்ன 'கோகிலா’ படத்தில் நடப்பதற்காக அழைத்தார். அதுதான் என் முதல் படமும் கூட. பாலுமகேந்திரா பட்டறையில் நான் தான் மூத்த பிள்ளை. 'பயணங்கள் முடிவதில்லை’ படம் வெளியாவதற்கு முன்பு வெறும் மோகனாகவே இருந்தேன். அந்தப் படம் வெளியான பின்னால் 'மைக்’ மோகன் என்று மாறிவிட்டேன். அந்தப் படத்தில் எஸ்பிபி தன் உயிரைக் கொடுத்து எல்லா பாடல்களையும் பாடி இருப்பார். இளையராஜா இசை பற்றி நான் சொல்லவே தேவையில்லை. அவர் இசைதான் என்னை வாழ வைத்தது.

ஆனாலும் 'மைக்’ மோகனாக மட்டுமே இல்லாமல் சில வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். 'நூறாவது நாள்’ அப்படி ஒரு படம்தான். ஆங்கில படத்தின் தழுவல் அது. அந்தக் கதையை தமிழில் எடுக்கலாம் என சொன்னதில் நானும் ஒருவன். அதில் நான் நெகடிவ் ரோலில் நடித்தேன். அது சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்திலும் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது.

அதே சமயம் மணிரத்னம்கூட மென்மையா இரண்டு படங்கள் பண்ணினேன். 'இதயகோயில்’ எனக்குப் பிடித்த படம். 1984இல் ஒரே வருடத்தில் மட்டும் நான் நடித்த 19 படங்கள் வெளியாகின. தினமும் மூன்று படங்கள் ஷுட்டிங் போவேன். ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே மாதிரி நடிப்பதைப்போலத் தோன்றியது. வேறு கதைகளைத் தேடலாம் என ஆசைப்பட்டேன். அதற்கு ஏற்ற கதைகள் எனக்கு உண்மையாகவே அமையவில்லை. அதனால் ஒரே மாதிரியான கதைகளை தவிர்த்தேன். அதனால் ஒரு இடைவெளி விழுந்தது. அந்த இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது.

என் படங்களுக்கு இளையராஜா இசையமைத்தது என் வாழ்நாள் பாக்கியம்தான். அவர் எந்த மாதிரியான பாடல்களைக் கேட்டாலும் கொடுப்பார். ஒரே மாதிரியான இசையை அவர் பாடல்களில் பார்க்கவே முடியாது. அவர் ஒரு இசைக் கடவுள். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம். அவர் என் காலத்தில் மிகப்பெரிய இசையமைப்பாளாக இருந்தார் என்று மட்டும் சொல்ல முடியாது. இப்போது வெற்றிமாறனின் 'விடுதலை’ படத்திற்கு என்ன மாதிரியான அற்புதமான பாடல்களை அவர் கொடுத்திருக்கிறார். இன்றுவரை அவரை அடித்துக் கொள்ள முடியவில்லையே? அவர் தொடர்ந்து இசையமைத்துக் கொண்டே இருக்கிறார். என் படங்கள் வெற்றி பெற இளையராஜாவும் எஸ்பிபியும்தான் காரணம். எஸ்பிபியை ஒரு முறை பாம்குரோவ் ஹோட்டலில் சந்தித்தேன். அவர், 'மோகன் நான் பாடும் பாடல்களைக் கேட்டுவிட்டு ரசிகர்கள் இதை நீங்கள் பாடுகிறீர்களா? இல்லை மோகன் பாடுகிறாரா?’ என்று கேட்கிறார்கள். அதைக் கேட்கவே பெருமையாக இருக்கிறது’ என்று சொன்னார். இப்படி யார் சொல்வார்கள்? அவர் ஒரு மேதை. அந்தளவுக்கு அன்பானவர்” எனக் கூறி இருக்கிறார்.

மேலும் தனது படங்களில் 'நூறாவது நாள்’ போன்ற படங்களை பார்ட் 2 எடுக்கலாம். அதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்குக் காலம் கைகூடி வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். பொதுவாக மைக் மோகனின் பாடல்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்றைக்கும் விரும்பிக் கேட்டு வந்தாலும், இவர் தனது பாடல்களைக் கேட்கமாட்டேன் என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+