தென் சென்னைப் புறநகர் பகுதிகளில் ஒரு நாள் இரவில் ஏழு கொள்ளைச் சம்பவங்கள்.. யார் அந்த இரண்டு பேர்?
சென்னை: தென் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் ஒரே இரவில் ஏழு வெவ்வேறு கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளதால், அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்து போயிருக்கிறார்கள். இந்தக் கொள்ளை சம்பவங்கள் எங்கெல்லாம் நடந்துள்ளது தெரியுமா? அஞ்சல் அலுவலகம், ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் சில வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. கொள்ளையர்கள் கத்தி முனையில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டிவிட்டு, பணம், கைபேசிகள் மற்றும் ஒரு காருடன் தப்பி சென்றுள்ளனர்.
என்ன தான் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், பாதுகாப்புக்கு செக்யூரிட்டிகள் இருந்தாலும், பாதுகாப்பிற்காக நாய்கள் வைத்திருந்தாலும், திருடர்கள் திருடத்தான் செய்கிறார்கள். திருடுவதற்கு தடையாக இருந்தால், அவர்களை காலி செய்யவும் தயங்குவது இல்லை.. சென்னையில் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக சென்னையின் புறநகர்பகுதியான தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன. ஒரே நாளில் ஏழு இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றி பார்ப்போம்.

முதல் சம்பவம் கிழக்குத் தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் அஞ்சல் அலுவலகத்தில் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தைப் பூட்டிச் சென்ற ஊழியர்கள், மறுநாள் காலை திரும்பியபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்கள். பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் அப்படியே இருந்தபோதிலும், எட்டு ஆபீஸ் பயன்பாட்டிற்கான செல்போன்கள் திருடப்பட்டிருந்தன.
அதே பகுதியில் உள்ள லோகேஷ் என்பவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், ₹10,000 ரொக்கம் மற்றும் இரண்டு செல்போன்களுடன் தப்பினர். சோழன் நகரில், நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான கடைக்குள் புகுந்து ₹5,000 திருடப்பட்டதுடன், வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரையும் எடுத்துச் சென்றுள்ளார்கள்.
மாருதி நகரில், அகில இந்திய வானொலியில் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரின் வீட்டைத் தாக்கிய கொள்ளையர்கள், பீரோவில் வைத்திருந்த பணத்தைத் திருடினர். அக்கம் பக்கத்து வீடுகள் பலவற்றிலும் கதவை உடைக்க முயற்சி செய்ததற்கான அறிகுறிகள் இருக்கின்றன. எனினும், பெரிய அளவில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படவில்லை.
அன்று நள்ளிரவில் தாழம்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றில் இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. அங்குப் பணியாளர்களைக் கத்தி முனையில் மிரட்டி, ₹15,000 ரொக்கம் மற்றும் ஒரு செல்போனுடன் அவர்கள் தப்பிச் சென்றனர். அன்றைய நாளின் விற்பனைப் பணம் ஏற்கனவே உரிமையாளரால் எடுத்துச் செல்லப்பட்டதால், திருடப்பட்ட தொகை குறைவாக இருந்தது என்று காவல்துறையினர் கூறினார்கள்.
சேலையூர் மற்றும் தாழம்பூர் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணையில், ஹெல்மெட் அணிந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு முகமூடி அணிந்த நபர்கள் இந்த ஏழு சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்திருக்கிறது. சந்தேக நபர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications