சினிமா மட்டுமின்றி.. அரசியலிலும் எம்ஜிஆரை செதுக்கியவர்.. அதிமுகவின் தூண்! அவர் தான் எம்ஆர் வீரப்பன்
சென்னை: மறைந்த தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், நடிகராக இருந்த எம்ஜிஆரை தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாற்றியவர்களில் முக்கியமானவர்,
பெரியார் மற்றும் அண்ணா ஆகியோருடன் இணைந்து பயணித்த திராவிட இயக்க அரசியல்வாதிகளில் முக்கியமானவர் ஆர்.எம்.வீரப்பன்.. தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் இன்று வயது மூப்பால் உயிரிழந்தார்

எம்ஆர் வீரப்பன்: தமிழகத்தில் உள்ள பல அரசியல்வாதிகளைப் போலவே இவரும் சினிமா துறை, அரசியல் என இரண்டிலும் பயணித்தவர். தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமான ரஜினிகாந்த்தின் பாட்ஷா திரைப்படத்தைத் தயாரித்தவர் இவர் தான்.. 1996 தேர்தல் சமயத்தில் ரஜினிகாந்த், "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது" என்று கூறியிருப்பார். அது அரசியல் அரங்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா படுதோல்விக்கு அது முக்கிய காரணமாக இருந்தது. அதன் பின்னணியில் இருந்தவரும் ஆர் எம் வீரப்பன் தான்.
இதற்கெல்லாம் முன்பே எம்ஜிஆரை மிகப் பெரிய தலைவராக உருவாக்கியதில் இவரது பங்கு முக்கியமானது. இவர் கதை எழுதி எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன், இதயக்கனி உள்ளிட்ட படங்கள் மிகப் பெரிய ஹிட் ஆக அமைந்தது மட்டுமின்றி எம்ஜிஆரின் பிம்பத்தை உயர்த்தியது. எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது கவிஞர் வாலியை அழைத்து மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும் என்ற ஹிட் பாடல் உருவாகக் காரணமும் இவர் தான்.
சினிமா: எம்ஜிஆரை நடிகராகவும் சரி அரசியலில் மிகப் பெரிய சக்தியாக உருவாக்கியதில் இவரது பங்கு முக்கியமானது. 'ராஜகுமாரி', 'மந்திரிக்குமாரி', 'மருத நாட்டு இளவரசி', 'மர்மயோகி', 'என் தங்கை' ஆகிய படங்கள் வெற்றி அடைந்தாலும் அதன் பிறகு எம்ஜிஆர் நடித்த சில படங்கள் சரியாகப் போகவில்லை. அந்தச் சமயம் தான் எம்ஆர் வீரப்பன் எம்ஜிஆருடன் இணைந்தார். இந்த காலகட்டத்தில் தான் எம்.ஜி.ஆர் 1953-ல் திமுகவுடன் இணைந்து அரசியல் களத்தில் இறங்கினார். அப்போது திமுக மற்றும் எம்ஜிஆரின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல் இருந்தது.
அப்போது எம்ஜிஆருடன் இணைந்து பயணிக்கத் தொடங்கிய எம்ஆர் வீரப்பன், எம்ஜிஆரை ஒரு மிகப் பெரிய தலைவராக நிறுவினார் என்றே சொல்லலாம். அரசியலிலும் எம்ஜிஆர் வெற்றிக்கு எம் ஆர் வீரப்பன் பங்கு முக்கியமானது. தனது அரசியலைத் திட்டமிட எம்ஆர் வீரப்பனைப் போல ஒருவர் இல்லாமல் போனதாலேயே அரசியலில் வெல்ல முடியவில்லை என்று சிவாஜி கணேசனே ஒரு முறை கூறியிருக்கிறார். அந்தளவுக்கு எம்ஜிஆர் அரசியலைச் செதுக்கியவர் எம்ஆர் வீரப்பன் என்றே சொல்லலாம்.
அரசியல் யுக்திகள்: 1958-59களில் ரிக்ஷாக்காரர்களுக்கு 6,000 ரெயின் கோட்களை வழங்க வேண்டும் என்ற எம்ஜிஆர் விருப்பத்தை நிறைவேற்றிக் காட்டினார். அது மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆரின் உருவம் பதித்த ரிக்ஷாக்கள் சென்னையில் தென்படத் தொடங்கியது அப்போது தான்.
1967இல் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த எம்.ஜி.ஆர், கழுத்தில் கட்டுடன் மருத்துவமனையில் இருக்கும் படங்களைத் தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகளாக வெளியிட்டது எம்ஆர் வீரப்பன் தரப்பு தான்.. இது எம்ஜிஆர் மிகப் பெரியளவில் வெல்லக் காரணமாக இருந்தது. மேலும், எம்ஜிஆர் அப்போது திமுகவில் இருந்த நிலையில், இது தமிழகம் முழுக்க திமுக வாக்குகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக இருந்தது.
அதிமுக: 1972ல் எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது இரு தரப்பையும் எம்ஆர் வீரப்பன் தான் சமாதானம் செய்ய முயன்றார். இருப்பினும், சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, அதிமுக உருவாக்கப்பட்டது. அப்போது பக்காவாக பிளான் போட்டு மாநிலத்தில் இருந்த எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களை அப்படியே அதிமுகவில் கொண்டு வந்ததும் எம்ஆர் வீரப்பன் திட்டம் தான்.
1980-84களில் மீண்டும் அதிமுகவுக்கு எம்ஆர் வீரப்பன் யுக்தி கை கொடுத்தது. அப்போது அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் அங்கே மருத்துவமனையில் படுக்கையில் சிரித்தபடி இருக்கும் போட்டோ மற்றும் எம்ஜிஆர் நடந்து செல்லும் வீடியோவை தமிழகம் முழுக்க கொண்டு சென்றவர் எம்ஆர் வீரப்பன் தான். இதுவே அந்தத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
இப்படிப் பல நிகழ்வுகளைச் சொல்ல முடியும். அப்படி எம்ஜிஆரை மிகப் பெரிய சக்தியாக உருவாக்கிய எம்ஆர் வீரப்பன் தான் இன்று மறைந்தார். அவர்கள் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications