"ஃபுல் பிரசண்ட்".. 66+ 63.. இதான் கணக்கு! சரியா இருக்கா? பலத்தை நிரூபித்த எடப்பாடி! அப்போ கேம் ஓவரா?
சென்னை: இன்று அதிமுக அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி தனக்கு தொண்டர்கள் பலம், எம்எல்ஏக்கள் பலம், மாவட்ட செயலாளர்கள் பலம் உள்ளது என்பதை நிரூபித்து உள்ளார்.
72 நாட்களுக்கு பின் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். தொண்டர்கள் வெள்ளம் சூழ, பெரும் வரவேற்பிற்கு இடையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் வந்தார்.
அவரை வரவேற்க அதிமுக அலுவலகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன,. முன்னதாக ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அதற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி தரப்பும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் கடந்த மாதம் 20ம் தேதி, அதிமுக அலுவலகத்தின் சீலை நீக்கி அதன் சாவிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக அலுவலகம் வந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு இன்று காரில் வந்தார் என்று சொல்வதை விட... மிதந்து வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். கிரீன் வேஸ் சாலையில் உள்ள அவரின் அரசு பங்களாவில் இருந்து ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக அலுவலக வரை அவர் வருவதற்கு கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள் ஆகிவிட்டது. டிராபிக் இல்லாத நாளில் இந்த சாலையில் 15 நிமிடத்தில் வந்து விடலாம். ஆனாலும் இன்று தொண்டர்கள் வெள்ளத்தில் எடப்பாடி மிதந்தபடி மெதுவாக வந்தார்.

கோஷம்
எடப்பாடி வரும் சாலை முழுக்க அவரின் ஆதரவாளர்கள் களமிறக்கப்பட்டு கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற.. பூமலர் தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கிறது என்று பாடல்கள் ஒலிக்க எடப்பாடி பழனிசாமி நகர்வலம் வந்தார். எடப்பாடியை வரவேற்க்க அதிமுக மாஜி அமைச்சர்கள் எல்லோரும் முன்பே அதிமுக அலுவலகத்தில் கூடி அவருக்காக காத்து இருந்தனர். காலை 10 மணியில் இருந்தே எடப்பாடிக்காக நிர்வாகிகள் காத்து இருந்தனர்.

வாழ்த்துக்கள்
அதன்பின் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் வந்ததும்.. எடப்பாடியார் வாழ்க.. கழக பொதுச்செயலாளர் வாழ்க என்று நிர்வாகிகள் கோஷம் எழுப்பினார்கள். அதன்பின் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் உள்ளே சென்று நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களிடம் சில நிமிடம் ஆலோசனை செய்தார். அதன்பின் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். எடப்பாடி இப்படி மரியாதை செய்த போதும் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

எம்எல்ஏக்கள்
இந்த நிகழ்வில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். எம்எல்ஏக்கள் 63 பேர் இருந்தனர். இன்னொரு பக்கம் மாவட்ட செயலாளர்கள் 66 பேர் இருந்தனர். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் பக்கம் 30-40 எம்எல்ஏக்கள் வர போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன. எம்எல்ஏக்களை தன் பக்கம் கொண்டு வர ஓ பன்னீர்செல்வம் முயன்றுள்ளார் என்று செய்திகள் வந்தன. எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தால் சின்னத்தை முடக்கலாம். அதோடு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தே எடப்பாடியை தூக்க முடியும். அவரின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்க முடியும்.

பிளான் என்ன?
இதன் காரணமாகவே முடிந்த அளவு எம்எல்ஏக்களை தன் பக்கம் கொண்டு வர ஓ பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வருகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று எடப்பாடியை சந்திக்க 63 எம்எல்ஏக்கள் வந்ததனர். இதன் மூலம் தனக்கு முழு எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது என்பதை எடப்பாடி நிரூபித்து இருக்கிறார். சமீபத்தில் அதிமுகவில் உள்ள கோவையை சேர்ந்த 3 எம்எல்ஏக்களை அப்படியே தூக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி 3 அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்த சில நாட்களில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளனர் என்று கூறப்பட்டது. ஆனால் கோவை எம்எல்ஏக்கள் 9 பேரும் இன்று எடப்பாடியை சந்தித்ததால்.. இவர்கள் திமுக பக்கம் தாவுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications