இந்தியா vs ஆஸ்திரேலியா சென்னை போட்டி! டிக்கெட் வாங்குவது எப்படி! குறைந்த விலை டிக்கெட் எவ்வளவு
சென்னையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
சென்னை: இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதனிடையே மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து சில முக்கிய தகவல்களைத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) வெளியிட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இப்போது பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றது.
இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றது. இப்போது நான்காவது டெஸ்ட் போட்டிகள் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது..

ஒருநாள் போட்டி
டெஸ்ட் போட்டி தொடர் முடிவடைந்த பிறகு ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 22இல் நடைபெறுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச போட்டி நடைபெறுவதால் இதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

சேப்பாக்கம் மைதானம்
இந்தப் போட்டிக்கு முன்னதாகவே சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின், எம்எஸ் தோனி ஆகியோர் திறந்து வைக்கப்பட உள்ளனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்டாண்ட்டிற்கு மறைந்த தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே இந்த மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து சில முக்கிய தகவல்களைத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) வெளியிட்டுள்ளது.

டிக்கெட் விற்பனை
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 22இல் நடைபெறும் நிலையில், ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 13ஆம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் மற்றும் இன்சைடர் தளங்களில் டிக்கெட்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆஃப்லைன் டிக்கெட், அதாவது மைதானத்தில் டிக்கெட் விற்பனை மார்ச் 18இல் எம் ஏ சிதம்பரம் ஸ்டேடிய வளாகத்தில் காலை 11:00க்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை டிக்கெட் ரூ 1,200ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இல்லை
மேலும், போட்டி நடைபெறும் போது பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. மொபைல் போன் தவிர டிஜிட்டல் கேமரா, லேப்டாப், டேப்லேட்கள், டிரோன்கள், பவர் பேங்குகளுக்கு அனுமதி இல்லை. அதேபோல ஹெல்மேட், லேப்டாப் பேக், குடை உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி இல்லை. இதை வைக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல டிக்கெட்டில் குறிப்பிட்டு கேட்கள் வழியாகத் தான் மைதானத்திற்குள் வர வேண்டும். அதேபோல மைதானத்திற்கு வரும் பார்வையாளர்கள் எங்கு பார்கிங் செய்யலாம் என்பது குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

பார்கிங்
கலைவாணர் அரங்கம், பொதுப்பணித்துறை பார்கிங் ஏரியா, மெட்ராஸ் யுனிவர்சிட்டி, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பார்கிங் செய்யலாம், முதலில் வருவார்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பார்கிங் இருக்கும். பார்கிங் குறைவாகவே உள்ள நிலையில், மக்கள் முடிந்தவரை பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மைதானத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்படாது. மேலும், புகையிலை பொருட்கள், சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி இல்லை.

எப்போது அனுமதி
மேலும், மைதானத்தில் வருவோருக்கு இலவச குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்குத் தனியாக ஐ லோவர் ஸ்டாண்ட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.. ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் நபர்கள் இ டிக்கெட்களில் இருக்கும் பார்கோட்களை ஸ்கேன் செய்தலே போதும். போலி டிக்கெட்களாக இருந்தால் அனுமதிக்கப்படாது. போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, அதாவது 11.30 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். உணவு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அதேபோல செல்ல பிராணிகளுக்கும் அனுமதி இல்லை.












Click it and Unblock the Notifications