உலுக்கும் இன்புளுயன்ஸா! தடுப்பது ரொம்பவே ஈஸி.. இதை மட்டும் செய்யுங்கள் போதும்! மருத்துவர்கள் அட்வைஸ்
சென்னை: தமிழகத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சல் அதிகரித்து உள்ள நிலையில், அதை எப்படித் தவிர்க்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
சுமார் 2.5 ஆண்டுகளாக நம்மை வாட்டி வதக்கியது கொரோனா வைரஸ் பெருந்தொற்று. வேக்சின் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனத் தீவிர முயற்சிக்குப் பின் இப்போது தான் கொரோனா சற்று குறைந்துள்ளது.
இதற்கிடையே பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் திடீரென காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாகப் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தமிழ்நாடு
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ள நிலையில், நோயாளிகள் பலரும் மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுத்து உள்ளனர். குறிப்பாகத் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

இன்புளுயன்ஸா காய்ச்சல்
மேலும், பருவ மழைக் காலத்தில் இன்புளுயன்ஸா போன்ற காய்ச்சல் வருவது இயல்பு தான் என்றும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்றும் அவர் தெரிவித்து இருந்தார். ப்ளூ காய்ச்சல் அதிகரித்து உள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களிடையே இன்புளுயன்ஸா காய்ச்சல் குறித்த அச்சம் அதிகரித்து உள்ள நிலையில், அதை எப்படித் தடுக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

உயிருக்கு ஆபத்தா
மனிதர்களின் சுவாச மண்டலம் இந்த இன்புளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்படும். மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். இவை பெரும்பாலும் சில நாட்களில் தானாகச் சரியாகிவிடும். இருப்பினும், முதியவர்கள், சிறுவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பாதிப்பு மோசமானால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் இல்லையென்றால் உயிருக்கே கூட ஆபத்தாகிவிடும்.

எப்படித் தடுக்கலாம்
இன்புளுயன்ஸா காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து என்பது அரிது தான் என்றாலும் கூட வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது. சரி இந்த இன்புளுயன்ஸா காய்ச்சலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பதைப் பார்க்கலாம். இன்புளுயன்ஸாவுக்கு எனத் தனியாகத் தடுப்பூசி உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமாக உள்ளவர்கள் இந்த வேக்சினை போட்டுக் கொள்ளாலாம். இது முதியவர்களுக்கு நிச்சயம் உதவும்.

கொரோனா
கடந்த இரு ஆண்டுகளாக இன்புளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்ததை நீங்கள் கவனித்து இருக்கலாம். காரணம் கொரோனா தான். கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க நாம் கடைப்பிடித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் பிற பாதிப்புகள் குறையவும் பெருமளவு உதவியது. கொரோனா குறைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதும் குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.

மாஸ்க்
அதிகம் வெளியே செல்பவர்கள், முக்கியமாக முதியவர்கள், மாஸ்க்குகளை அணிந்து கொள்ளலாம். இணை நோய் உள்ளவர்கள் என்95 அல்லது கே95 மாஸ்க்குகளை அணிந்து கொள்ளலாம். இந்த மாஸ்க்குகளை அணியக் கஷ்டமாக இருந்தால் காட்டன் மாஸ்குகளை அணிந்து கொள்ளலாம். காட்டன் மாஸ்குகளை ஒவ்வொரு முறை வீட்டிற்கு வந்த உடனும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

கை கழுவ வேண்டும்
அடுத்தாக கைகளை அடிக்கடி முறையாகச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இன்புளுயன்ஸா தொடங்கி அணைத்து வைரஸ்களும் அசுத்தமான மேற்பரப்பைத் தொடும் போது அங்கிருந்து நமக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வெளியே சென்றாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி அடிக்கடி கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். கை கழுவாமல் மூக்கு மற்றும் வாய் பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அறிகுறிகள்
காய்ச்சல், தசைகள் வலி, தலைவலி உலர்ந்த மற்றும் நீடித்த இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகள் ஆகும். மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, கண் வலி, வாந்தியும் இதன் அறிகுறிகள் ஆகும். இந்த பாதிப்பு அதிகரித்தால் உடனே அருகே உள்ள மருத்துவமனைகளில் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications