Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவர்தான் எம்ஜிஆர்.. ஒரு விசிட்.. கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு "தண்ணீர் கொண்டுவந்தார்"- இன்பதுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்ததாகவும் அப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பெங்களூருக்கே சென்ற எம்.ஜி.ஆர் விளம்பரமே இல்லாமல் எப்படி தீர்வு கண்டார் என்பது குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை கூறியுள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுத்து கர்நாடகா அடம் பிடித்து வருகிறது. தமிழகத்திற்கு ஜுன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு, தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் கடந்த வியாழக்கிழமை சந்தித்து, ஒப்பந்தப்படி கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 How was the Cauvery issue resolved smoothly during MGRs tenure? AIADMK Inbadurai explanation

ஆனால், இதற்கு பதில் அளித்த, கர்நாடகா துணை முதல் முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், கர்நாடக மக்களின் குடிநீர் தேவை போகவே, அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம்" என்றார். காவிரி விவகாரத்தில் கர்நாடகா இப்படி அடம் பிடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் காவிரி பிரச்சினை வரும் போது அவர் அதை எப்படி கையாண்டார் என்பது குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இன்பதுரை விளக்கம்: இது தொடர்பாக இன்பதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரியில் இதுவரை போதிய நீர் திறந்து விடப்படாததால் டெல்டாவில் பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. பெங்களூருக்கு கடந்த வாரம் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் காவிரி குறித்து பேசினாரா? டி.கே.சிவக்குமாரிடம் தண்ணீர் கேட்டாரா? என்றால் உதட்டை பிதுக்கிவிட்டு துரைமுருகனை டெல்லிக்கு அனுப்பியதாக கூறலாம்.

எதற்கு டெல்லி? காவிரி அணையின் சாவி உங்கள் கூட்டணி தோழர் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவிடம் அல்லவா இருக்கிறது? என்று நாம் கேள்வி கேட்கலாம் அல்லவா? அவ்வாறு யாரும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வர் மணிப்பூரை கையிலெடுத்திருக்கிறார். கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள் அனைத்தும் மணிப்பூர் பற்றி தொண்டை வறள விவாதம் நடத்துகிறது. மணிப்பூர் இரைச்சலில் டெல்டாவில் கருகும் பயிர்களின் ஓலம் டெல்டாகாரரின் ஆட்சியிலேயே அமுங்கிப்போனதுதான் கொடும் சோகம்!

பெங்களூர் புறப்பட்டார்: எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் கூட ஒரு முறை தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.

அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச்சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங்கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவருடன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.

தண்ணீரை குடிக்கவே இல்லையே ஏன்?: எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.

ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. 'ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?' என்று ரகுபதியின் தாய் கேட்டார்.

கொடுக்க மாட்டேன் என்கிறாரே?: அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ''தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?'' என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.

அவர்தான் எம்ஜிஆர்!: அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.

உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராமகிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை கொண்டு வந்து விட்டார். அவர்தான் எம்ஜிஆர்! எனவே தான் தலைமுறைகள் கடந்தும் தமிழர்கள் நெஞ்சில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+