சென்னையில் 476 பவுன் தங்கம், 400 கிலோ வெள்ளி, 11 சொகுசு கார்கள்.. ரஷ்யாவையே ஆடிப்போக வைத்த கும்பல்
சென்னை: சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவருக்கு 2000 கோடி ரஷ்யா அரசு முதலீடு செய்யும் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.. அப்படி ஏமாற்றி அவரிடம் மட்டும் சுமார் 7 கோடிக்கும் அதிகமான பணத்தை பறித்துள்ளது. அந்த கும்பலை தேடிப்பிடித்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 476 பவுன் தங்கம், 400 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.14.50 லட்சம் ரொக்கம், 11 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தியாகராய நகரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர் கார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்தோ - ரஷியன் அசோசியேட் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 38 வயதாகும் அருண்ராஜ், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆலிவ் பீச்சில் வசித்து வருகிறார்.

இவர் இந்தோ-ரஷியன் தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதி என்று என்னிடம் கூறி, நம்பிக்கை தரும் வகையில் பேசி அறிமுகமானார். ரஷிய அரசு, இந்தியாவில் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்ய முன்வந்து உள்ளதாக கூறிய அவர், திருச்சியில் நான் நடத்தி வரும் வியாபார திட்டத்துக்கு, ரூ.2 ஆயிரம் கோடி வரை முதலீடு பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். அவர் பேசியதை நம்பி பணம் தர ஒப்புக்கொண்டேன். இதற்காக கமிஷனாக என்னிடமிருந்து ரூ.7 கோடியே 32 லட்சத்து 45 ஆயிரம் பெற்றார்.
மேலும், எனது நிறுவனத்தில் ரஷிய நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக போலியான ரஷிய அரசின் லோகோ, கொடிகள் மற்றும் தகவல்களை என்னிடம் காண்பித்தார். அவை போலி என்பது பின்னர்தான் எனக்கு தெரிய ஆரம்பித்தது. இதுகுறித்து, அருண்ராஜையும், அவரது கூட்டாளிகளையும் தொடர்பு கொண்டு நான் கேட்க முயன்றேன். ஆனால் மேற்கொண்டு என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே, என்னிடம் மோசடி செய்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் திநகர் தொழில் அதிபர் கூறியிருந்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணை முடிவில் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அருண்ராஜ் உள்பட 9 பேரை கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து 476 பவுன் தங்கம், 400 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.14.50 லட்சம் ரொக்கம், 11 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் சிக்கிய அருண்ராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
