சென்னை துரைப்பாக்கம் ஐடி ஊழியர் வீட்டில்.. அதிர வைத்த ஐந்து பெண் கொள்ளைக்காரிகள்.. என்ன நடந்தது
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. சென்னையிலேயே அதிக ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி என்றால் அடையாறு முதல் நாவலூர் உள்ள பழைய மகாபலிபுரம் சாலை தான்.. குறிப்பாக சொல்வது என்றால், கந்தன்சாவடி, துரைப்பாக்கம் பெருங்குடி, சோழிங்கநல்லூரில் அதிகமாக உள்ளன. துரைப்பாக்கத்தில் வசிக்கும் ஐடி ஊழியர் வீட்டில் நகை திருடு போனது.. அங்கு திருடியது ஐந்து பெண் கொள்ளையர்கள் என்பது போலீசுக்கு தெரியவந்தது..இது பற்றி பார்ப்போம்.
சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையான ராஜீவ் காந்தி சாலையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் அந்த பகுதியில் தான் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். பலர் சொந்த வீடுகள் வாங்கியும் வசித்து வருகிறார்கள். அந்த வகையில்' சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பி.டி.சி., சந்திப்பு பல்லவன் குடியிருப்பை சேர்ந்த 33 வயதாகும் டில்லிபாபு (வயது 33). ஐ.டி.ஊழியரான இவர், கடந்த ஏப்ரல் 9-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் சாவியை வீட்டு வாசலில் உள்ள ஷூவில் வைத்து சென்றிருக்கிறாராம்.

டெல்லிபாபு மனைவியுடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இது தொடர்பாக கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தார்.
கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், போலீசார் விசாரணையில், துணிச்சலாக இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பெண் கொள்ளையர்கள் என தெரியவந்தது. இது தொடர்பாக துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்த மீனா (30), ரம்யா (21), கஸ்தூரி (23), கலைவாணி (25) மற்றும் 18 வயதுடைய பெண் உள்பட 5 பெண்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 19 பவுன் தங்க நகைகளை மீட்டனர். தம்பதியினர் வாடிக்கையாக ஷூவில் சாவியை மறைத்து வைத்து வெளியே செல்வதை நோட்டமிட்ட பெண் கொள்ளையர்கள் சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்து நகையை திருடியதாக ஒப்புக்கொண்டனர். பிடிபட்ட பெண் கொள்ளையர்கள் இதேபோல் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.டி.ஊழியர் வீட்டில் துணிச்சலாக புகுந்து பெண் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications