பல தலை உருள போகுது.. கார்ப்பரேட்களுக்கு பேரிடி! காலியான பாஜகவின் பொன்முட்டை இடும் வாத்து.. இனி என்ன?
சென்னை: பாஜகவிற்கு பொன்முட்டை இடும் வாத்தாக இருந்தால் தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.
இந்த தேர்தல் பத்திர தீர்ப்பு என்பது மொனோபாலி தொழிலதிபர்களுக்கு, அரசியல் கட்சிகளை தாஜா செய்து வந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விழுந்த ஒரு அடியாகும். இதுவரை அவர்கள் கொடுத்த.. கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரங்களின் தரவுகள் வெளிவந்தால் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தனர் என்ற மொத்த விவரமும் அம்பலப்படுத்தப்படும்.

எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருந்தது.. அதனால் எந்த அரசியல் கட்சி எந்த நிறுவனத்திற்கு சாதகமாக முடிவுகளை எடுத்தது எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும். அரசியல் வர்க்கமும் தொழில்துறையும் இந்த தீர்ப்பால் தடம் புரண்டு உள்ளன என்றுதான் கூற வேண்டும்.
தேர்தல் பாத்திரங்கள் செயல்படும் முறை: கடந்த 2018ம் தேதி பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.
இந்த பத்திரங்கள் ₹ 1,000 முதல் ₹ 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன, மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளைகளிலும் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் இல்லை. இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம்.
இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது.
தீர்ப்பு: இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் விசாரித்து கடந்த நவம்பர் மாதம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த வழக்கில்தான் இன்று தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
வெளியே வரும் விவரம்: இந்த நிலையில்தான் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இதுவரை கட்சிகள் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து நிதிகளை பெற்றது என்ற விவரங்கள் மொத்தமாக வெளியே வரப்போகிறது.
அதன்படி எஸ்பிஐ வழியாக 2019 ஏப்ரல் 12 முதல் தேர்தல் பத்திரங்களை விற்றது யார், எந்த அரசியல் கட்சிக்காக வாங்கினார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பொன்முட்டை போட்ட வாத்து; 2022-23 நிதியாண்டில், பாஜக கிட்டத்தட்ட ₹ 1,300 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது, அதே காலகட்டத்தில் காங்கிரஸுடன் ஒப்பிடும்போது இது ஏழு மடங்கு அதிக நிதி ஆகும்.
இந்த ஆண்டிற்கான பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 2,120 கோடியாகும், தேர்தல் பத்திரங்களில் மொத்தத்தில் 61 சதவீதம் பாஜகவிற்கு சென்றுள்ளது. முந்தைய 2021-22 நிதியாண்டில், பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 1,775 கோடி. 2022-23 ஆம் ஆண்டிற்கான பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 2,360.8 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் வருவாயில் சரிவைச் சந்தித்து உள்ளது காங்கிரஸ். 2022-23ல் ₹ 171 கோடியை மட்டுமே காங்கிரஸ் ஈட்டியது. இது 2021-22 நிதியாண்டில் பெற்ற ₹ 236 கோடியிலிருந்து குறைந்துள்ளது.
பாஜகவிற்கு தொடர்ந்து சாதகமாக இருந்த இந்த திட்டத்தை தற்போது உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications