நானே நேரில் NIA விசாரணைக்கு போறேன்.. நாங்க எதுக்கு பயப்படணும்? NIA ரெய்டு குறித்து சீமான் ஆவேசம்!
சென்னை: என்ஐஏ சோதனை மூலம், நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று தெரிகிறது. நாட்டை கொள்ளையடித்தவர்களே அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்படவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தின் நிர்வாகிகளோடு தொடர்பில் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நிதி பெற்றனரா என்பது குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

திருச்சி சண்முகா நகரில் சாட்டை துரைமுருகன் வீடு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர்கள், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், நாம் தமிழர் கட்சி நிர்வாகியான காளப்பட்டி முருகன் ஆகியோர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சாட்டை துரைமுருகன் சென்னையில் உள்ள நிலையில், வீட்டில் இருந்த அவரது மனைவியிடம், வரும், 7ம் தேதி சென்னையில் உள்ள அலுவலகத்தில் துரைமுருகன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்து விட்டு என்ஐஏ அதிகாரிகள் சென்றனர். இதேபோல விஷ்ணு, இசை மதிவாணனையும் வருகிற 7ம் தேதி சென்னையில் உள்ள அலுவலகத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்து விட்டுச் சென்றனர்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தேர்தல் நேரத்தில் இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நபர்கள் நாங்கள் இல்லை. சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்? விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்?
தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.கவின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ சோதனை நடைபெறுகிறது. நாட்டை கொள்ளையடித்தவர்கள் அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்.
என்ஐஏ சோதனையின் மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது, நான் சரியான பாதையில் செல்கிறேன். கட்சியை வழிநடத்துவது நான். நியாயப்படி என்ஐஏ அதிகாரிகள் என்னிடம் தான் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். என்னிடமே கேள்வி கேட்டு தெளிவு பெறலாம். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து நானும் என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆஜராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications