ஐ யம் ஹீரோ.. மை வில்லன் கருணாநிதி.. வில்லி ஜெயலலிதா.. ஸ்டைலாக சொல்லி விட்டு சிரித்த விஜயகாந்த்
சென்னை: அரசியல் ஒரு சினிமா என்றால்... ஐ யம் ஹீரோ! மை வில்லன் இஸ் கலைஞர்... மை வில்லி இஸ் ஜெயலலிதா என்று கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது விஜயகாந்த் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தமிழக அரசியலில் பொற்காலம் என்று ஒன்று இருந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு வரைக்கும் ஊடகங்களிலும், தினசரி நாளிதழ்களிலும் கார சார பேட்டிகள்.. அறிக்கைகள் என தினம் தினம் ஏதாவது வந்து கொண்டே இருக்கும். மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகிய மூவரும் ஆக்டிவ் அரசியலில் இருந்த போது தினம் தினம் ஏதாவது ஒரு பேட்டிகள் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும்.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அதிமுக தன்னுடன் சிறிய கட்சிகளை மட்டும் கூட்டணி சேர்த்துக்கொண்டு தனித்து 232 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேமுதிக தலைமையில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதிமுக முதல்வர் வேட்பாளராக ஜெயலலிதாவும், திமுக முதல்வர் வேட்பாளராக கருணாநிதியும் முன்னிறுத்தப்பட்ட அதே நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அப்போது விஜயகாந்த் மேடைகளில் திமுக, அதிமுகவிற்கு எதிராக பேசியது அவரது தொண்டர்களை வெகுவாக கவர்ந்தது. ஆங்கில ஊடகங்களும் வந்து பேட்டி எடுத்து ஒளிபரப்பினர். 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சார நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்டிடிவி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அவரது மறைவிற்குப் பிறகு தற்போது அந்த பேட்டி அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பிரணாய் ராயின் கேள்விகளுக்கு ஆங்கிலம், நடுநடுவே தமிழ் என ஏக உற்சாகத்துடன் பதில் அளித்திருக்கிறார் விஜயகாந்த். ஒரு கேள்விக்கு பதில் அளித்த விஜயகாந்த்.. அரசியல் ஒரு சினிமா என்றால்... ஐ யம் ஹீரோ! மை வில்லன் இஸ் கலைஞர்... மை வில்லி இஸ் ஜெயலலிதா Good ஆ என்று ஸ்டைல் ஆக கேட்டு விட்டு சிரிக்கிறார் விஜயகாந்த்.

கருணாநிதி 90 அபோவ், ஜெயலலிதா 60 எபோவ், மை ஏஜ் ஐ டோன்ட் நோ. ஹார்ட் இஸ் மை ஏஜ். இட் இஸ் வெரி யங்!' என்று அசத்தலாக ஆங்கிலத்தில் பேசினார் விஜயகாந்த். 2017ஆம் ஆண்டில் இருந்தே விஜயகாந்த் பேசுவது படிப்படியாக குறைந்து போனது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது விஜயகாந்த் சைகையால் மட்டுமே பிரச்சாரம் செய்தார்.
கடந்த 2 ஆண்டு காலமாக பொது வெளியில் வருவதை குறைத்துக்கொண்டார் விஜயகாந்த். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் சர்க்கர நாற்காலியில் அமர்ந்து பங்கேற்றார். அந்த காட்சி தொண்டர்களை கண்ணீர் விட வைத்தது. திடீர் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

விஜயகாந்த் மரணத்திற்குப் பிறகுதான் அவரது பல சேவைகள் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. பல லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா, கருணாநிதியின் மரணத்திற்கு பிறகு அறிக்கை மூலமே அரசியல் செய்து வந்த விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார்.
விஜயகாந்த் மரணத்திற்குப் பிறகு அவரது பேட்டிகள், மேடை பேச்சுகள், சினிமா பாடல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோர் இல்லாதது தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications