திமுக கூட்டணி வெற்றியால் பலனில்லை.. எதிரணியில் இருந்து ஸ்டாலின் இப்படி செய்கிறார்.. தமிழிசை ஆவேசம்!
சென்னை : எந்த பலனுமின்றி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடங்கள் கிடைத்தது கவலையளிக்கிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கவுள்ளது. நாளை மாலை 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். நாட்டில் உள்ள 22 மாநிலங்களில் பாஜக ஏராளமான தொகுதிகளில் வெற்றிபெற்றாலும், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றிபெற்றது.

பாஜக தரப்பில் நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டும், 13 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தனர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் எப்போதும் இந்த தவறை செய்கிறார். எதிரணியில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்கவிடாமல் துரோகம் செய்து வருகிறார்.
ஆனால் நாங்கள் நிச்சயம் மக்களுக்காக போராடி அத்தனை திட்டங்களையும் கொண்டு வருவோம். பாஜகவுடன் சேர்ந்தாலே தோல்வியடைவோம் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது பாஜக உடன் சேர்ந்திருந்தால் வெற்றிபெற்றிருப்போம் என்று கூறியதை தான் நான் கூறினேன். அதேபோல் பாஜக அதிக வாக்குகளை பெற்றது மகிழ்ச்சி தான். ஆனாலும் தொகுதிகளில் வெற்றிபெற முடியாதது சோகம் தான்.
அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விடவும் எந்த பலனும் இல்லாமல் காங்கிரஸ், திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைப்பதிருப்பது தான் கவலை. அதிமுக - பாஜக கூட்டணி பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. ஒவ்வொரு மாநில தேர்தலுக்கும் ஒரு வியூகம் அமைக்கப்படும்.
அதனால் நிச்சயம் 2026ல் வலிமையான கூட்டணியுடன் பாஜக போட்டியிடும். பாஜகவுக்கு வந்த வாக்குகள் அனைத்தும் பாமகவின் வாக்குகள் என்றால், காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் திமுகவின் வாக்குகள் தான். திமுகவினால் மட்டுமே அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் வெல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications