மூட்டு வலி தாங்க முடியவில்லை.. குண்டாக இருப்பது கஷ்டமா? : குக் வித் கோமாளி தாமு ஓபன் டாக்
சென்னை: காமெடி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக எந்தளவுக்கு தனது கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு நடித்துவருகிறேன் என்பது பற்றி செஃப் தாமு கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக செஃப் தாமு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. ஆரம்பக் கட்டத்தில் இதற்கு ஒரு கலவையான விமர்சனம் வந்தது. பின்னர் இதில் பங்கேற்பவர்கள்கூட ஒரு தனி பிரபலமாகச் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு வாழ்க்கையில் மாறினர்.

யாருக்கும் முகம் தெரியாமல் ஒரு ஃபை ஸ்டார் ஹோட்டலில் சமையல் கலைஞராக இருந்த தாமு இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு ஸ்டார் வேல்யூவை பெற்றுள்ளார். இந்த சீசன் 5இல் ராமர், இர்ஃபான், மணிமேகலை, Vtv கணேஷ் எனப் பலர் பங்கேற்றுக் கலக்கி வருகின்றனர். ஒவ்வொரு சீசன் போது போட்டியாளர்கள் மாறினாலும் இந்த செட்டில் மாற்றாத செட் பிராபர்ட்டியாக இருபவர் செஃப் தாமு. அவர் பல காலமாக இதன் அங்கமாக இருக்கிறார். ஒரு கேளிக்கை நிகழ்ச்சிதானே என பலரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, சிம்புவின் கையால் விருது பெறும் போது வெடித்து தாமு அழுததைப் பலரால் எப்போது மறக்க முடியாது.

இந்தக் கலகலப்பான மனிதருக்குள் இவ்வளவு சோகமா? என உலகம் பார்த்துக் கண்கலங்கிய தருணம் அது. இத்தனை சீசன்களை தாண்டி தொடர்ந்து இதில் இயக்கி வரும் தாமு, "நிகழ்ச்சி கலவையான விமர்சனம் வருவது நல்லதுதான். அதைவைத்துத்தான் மக்கள் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். புதியதாக யோசிக்க முடியும். எனவே அது சரிதான். ஒன்று முதல் 3 சீசன் வரை இந்தக் கலவையான விமர்சனத்தை நாங்கள் எதிர்கொண்டோம். இப்போதுகூட சில அப்படி வருகின்றன. மக்கள் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அதை நான் பாசிடிவ் ஆக எடுத்துக்கொள்வேன்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய செஃப் தாமு, "மக்கள் மத்தியில் நிகழ்ச்சிக்கு இன்னும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவரை 4 சீசன் முடிந்துவிட்டது. இப்போது 5வது சீசன் போய்க் கொண்டிருக்கிறது. இதற்காகப் பலரும் தங்களின் உழைப்பைக் கொட்டி வருகிறார்கள். நான் ஒருநாளைக்குப் பல மணிநேரம் ஷோ ஷூட்டிங்கிற்காக நின்றுகொண்டே இருக்கிறேன். அது சாதாரணமான விசயம் கிடையாது.

என் உடல் எடைக்கு இத்தனை மணிநேரம் நிற்பது ரொம்பவே கஷ்டம். காலையில் 10 மணிக்குப் படப்பிடிப்பு தொடங்கினால் மதியம் 2 மணி வரை போகும். அதுவரை உட்கார முடியாது. நின்றுகொண்டேதான் சமைக்க வேண்டும். எனக்குள் எக்கச்சக்கமான வலிகள் இருக்கின்றன. அதை தாங்கிக் கொண்டுதான் ஷோவை செய்து வருகிறேன்.
நம்ம கஷ்டத்தைப் பார்த்தால் ஷோ நன்றாக வராது. நம் வேலைக்காக சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். வேலையில் விறுவிறுப்பு வரும்போது எனக்குள் இருக்கின்ற வலி மறந்துபோய்விடும். எனக்கும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு அதிகப்படியான ஒரு பிணைப்பு இருக்கிறது. அப்படியான ஒரு உறவில் திடீரென்று ஒரு போட்டி முடிவு வரும். அப்போது பிரிய வேண்டிய நிலை வரும். அதை நினைத்துத்தான் எனக்குக் கண்ணீர் வந்துவிடும். அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
எப்படியாவது முயற்சி செய்து உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றோ அதற்காக டயட் இருக்க வேண்டும் என்றோ நான் நினைத்தது இல்லை. நாம் குண்டாக இருக்கிறோம் என்று சிலர் ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? ஒரு பொறாமையில் சொல்கிறார்கள். எனக்கு அதில் பிரச்சினை இல்லை. ஒரே பிரச்சினை மூட்டு வலிதான். அது தொடர்ந்து நின்றுகொண்டே இருப்பதால் வருவது. உட்கார்ந்தால் வலி இருக்காது. எனக்கு உடல் பருமன் பற்றி எந்தவித வருத்தமும் இல்லை" என்கிறார்.












Click it and Unblock the Notifications