சினிமாவில் கூட இப்படி பார்த்ததில்லை.. திரும்ப பாஜக ஜெயிச்சா இனி தேர்தலே நடக்காது.. ப.சிதம்பரம் பரபர!
சென்னை: மத்தியில் இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மயிலாப்பூரில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜகவிடம் பதில் இருக்கா?: அப்போது பேசிய ப.சிதம்பரம், "10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மையும், விலைவாசி உயர்வும் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியில் மோடி என்ன வாக்குறுதி அளித்தார்? எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்று கேள்வி கேட்டால் பாஜகவிடம் பதில் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் 35 சதவீதம் ஆக இருந்த வேலையில்லாதோர் விகிதம் தற்போது 65 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
ஐஐடியில் உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்களிலேயே 30 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். தனிநபர் சராசரி வருவாயை பொறுத்தவரை உலகளவில் 120வது இடத்தில்தான் இந்தியா உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 145 டாலருக்கு விற்பனையானது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் விற்பனையானது.
எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடி இங்கு வருகிறார்?: தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 80 டாலராக குறைந்தபோதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது பாஜக ஆட்சியில், ஏழை, நடுத்தர மக்கள் அனைவரும், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமை இப்படி இருக்க எந்த முகத்தை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி ஓட்டு கேட்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார்?
எந்த அரசியல் கட்சியும் வருமான வரியை செலுத்தியதே இல்லை. கட்ட வேண்டிய விதியும் சட்டத்தில் கிடையாது. அரசியல் கட்சி வரி செலுத்த சட்டத்தில் இடம் இல்லாதபோது காங்கிரஸ் கட்சிக்கு ரூ.3772 கோடி வரி அபராதம் விதித்துள்ளது பாஜக அரசு. பாஜக ஆட்சியில் நாடு அழிவுப்பாதையை நோக்கிச் செல்கிறது.
சினிமாவில் கூட இப்படி பார்த்ததில்லை: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒரு கட்சி, ஒரே தலைவர், ஒரே பிரதமர் மோடி என்பதில் போய்தான் முடியும். இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும். அதனால், இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுவதும் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
நான் அச்சமூட்டுவதாக நினைக்க வேண்டாம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? சினிமாவில் கூட இப்படி பார்த்ததில்லை. ஏன் நாவலிலும் கூட இதுபோல படித்ததில்லை" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications