மோடியை விஜய் சந்தித்தபோது நான் இருந்தேன்! கொட்டி தீர்த்த கொங்கு ஈஸ்வரன்
சென்னை: கடந்த 2014இல் கோவை வந்த மோடியை விஜய் சந்தித்தபோது தானும் உடன் இருந்ததாகக் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே அவர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசி இருந்தார். அப்போது விஜய்யை மோடி சந்திக்க விரும்பி அழைத்ததால் வந்தாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இது 2014 மக்களவைத் தேர்தல் சமயம் நடந்த சந்திப்பு. இதற்கு முன்னரே விஜய் 2009 ஆம் ஆண்டு டெல்லியில் ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேசி இருந்தார். அதைப் பற்றிக் கடந்த ஆகஸ்ட் மாதம் பேசிய விஜயதரணி "ராகுல்காந்தி சொல்லித்தான் விஜய் கட்சியே ஆரம்பித்துள்ளார்" என்று ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார்.

அதனால், தவெக விக்கிரவாண்டி மாநாட்டில் ராகுல்காந்தி கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் பரவியது. அடுத்து காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் செய்தி பரவியது. ஆனால், இதை மறுத்து தவெக தரப்பிலிருந்து ஒரு செய்தியும் வெளியாகவில்லை. இறுதியில் கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் விஜய் மட்டுமே ஒன்மேன் ஷோ நடத்தி இருந்தார்.
இந்நிலையில் விஜய் மாநாடு பற்றியும், 2014இல் மோடியை விஜய் சந்தித்தது பற்றியும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சில உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். அவர், "விஜய் மாநாட்டுக்கு அதிக முக்கியத்துவத்தை ஊடகங்கள் கொடுக்கின்றன என்பதுதான் உண்மை. இவ்வளவு கவனம் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். விஜய் அதிகாரத்தில் பங்கு என்று சொல்கிறார்.
அவர் இன்னும் ஒரு தேர்தலில்கூட நிற்கவே இல்லை. அதற்குள் ஆட்சியில் பங்கு என்பது எப்படிச் சரியாக இருக்கும். விஜய் வருகையால் திமுகவைப் பாதிக்கவே போவதில்லை. அதிமுக கொஞ்சம் கூட பாதிக்காது. இதில் நாம் தமிழர் கட்சிதான் அதிகம் பாதிக்கும். அண்ணாமலைக்காகப் போன இளைஞர்கள் விஜய் பக்கம் வரலாம்.

கடந்த 2009இல் நான் மாநாடு நடத்திய போது விஜய்யைவிட அதிகம் கூட்டம் வந்தது. நான் ஒரு நடிகனல்ல. எங்கள் தொண்டர்கள் கொள்கைக்காகக் கட்சிக்கு வந்தவர்கள். பல மாநாடு நடத்தி இருக்கிறோம். 60 ஆயிரம் இருக்கைகள் மேல் போட்டு கூரை அமைத்து அரங்கம் அமைத்தோம். விஜய்யிடம் இல்லாத பணமா? அவர் கூரை அமைத்து அரங்கம் அமைத்திருக்கலாம். எனவே விஜய் மாநாடு 2026 தேர்தலில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று பேசி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "2014இல் கோவைக்கு மோடி வந்திருந்தார். அப்போது மக்களவைத் தேர்தல் நேரம். நான் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டேன். அப்போது ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார். அன்றைக்கு மோடியைச் சந்திக்க வந்திருந்தார் விஜய். அந்த அறையில் மொத்தமே 3 பேர்தான் இருந்தோம். அதில் நானும் ஒருவன். நான், மோடி, விஜய் மூன்று பேரும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம். இன்று விஜய் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவந்துள்ளார். 2014இல் இருந்த அரசியல் சூழல் வேறு.
இப்போது நான் அன்று பேசினோம் என்பதை வெளியே சொல்ல முடியாது. அது நாகரிகமாகவும் இருக்காது. ஆனால், இன்றைக்கு விஜய் கட்சியினர் அனைவரும் திமுக மீது விமர்சனம் வைப்பதைப் போலப் பேசுகிறார்கள். அவர்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைப் போலப் பேசவே இல்லை" என்கிறார்.


Click it and Unblock the Notifications
