எங்க கோவணத்தையும் இழக்கணுமா.. அமைச்சர் துரைமுருகன் இப்படி பேசலாமா.. செல்வப்பெருந்தகை ஆவேசம்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம் திறப்பு விழாவில் அதிகாரிகள் சாதிய பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை பேசியதில் வருத்தமாக உள்ளது. அவர் உண்மை தெரிந்து பேச வேண்டும் என்று கூறினார். இதற்கு செல்வப்பெருந்தகை எங்களுக்கு இருக்கும் கோவணமே சுயமரியாதை தான். அதையும் இழக்க வேண்டுமா. அவர் பேசியதில் எனக்கு தான் வருத்தம் என்று துரைமுருகனுக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களிடம், "ஒரு மூத்த அமைச்சர், மாபெரும் கட்சியின் பொதுச்செயலாளர் இப்படி பேசலாமா. அவர் பேசியது எனக்கு மிகவும் வருத்தம். அது அதனுடன் முடிந்துவிட்டது. நான் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து பேசவில்லை. நான் எங்கள் இந்திய கூட்டணியுடன் பேசிய கருத்தை யாரோ திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து பரப்பியுள்ளனர். என் தோழர்களுடன் என் சொந்த கருத்தை பகிர்வதை பத்திரிகைகளில் பரப்பியது தவறு.

அதிகாரிகளின் தவறு
நான் பேசிய வருத்தமளிப்பதாக துரைமுருகன் கூறுகிறார். நான் ஒரு மக்கள் பிரதிநிதி. 4.5 லட்சம் வாக்காளர்கள் அங்கு வசிக்கிறார்கள். அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். என்னை கேட்டுவிட்டு திறங்கள் என்று சொல்லவில்லை. எனக்கு ஏன் தகவல் சொல்லவில்லை என்று தான் கேட்டேன். அது என் உரிமை. என்னுடைய தொகுதியை ஒட்டியே தண்ணீர் செல்வதால், தண்ணீர் திறக்கும்போது நான் ஒரு வார்த்தை அங்குள்ள ஊராட்சி தலைவர்களிடம் தகவல் சொல்லியிருப்பேன்.
மக்களை எச்சரிக்கைப்படுத்துதற்காக கேட்டேன். இதைக் கேட்டதையே குற்றம் என்று அவர் சொன்னால் எப்படி. அதாவது ஆட்சியாளர் என்பது வேறு. அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் வேறு. அதிகாரிகளை கேட்பதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும். நான் வரம்பு மீறி பேசினால் அவர் கேட்கலாம். நாங்கள் எப்போதும் வரம்பு மீறி பேச மாட்டோம். எப்பவும் வரம்பு மீறி பேச மாட்டோம். எங்களுக்கு ஒரு அளவு கோல் உள்ளது. எங்கள் உயரம் நாங்கள் அறிவோம்.
சுயமரியாதைக்கு பங்கம்
தொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதிகாரிக்கு செல்போனில் தொடர்பு கொண்டேன். 5 மணி நேரம் அவர் அழைப்பை எடுக்கவில்லை. அடுத்த நாளும் எடுக்கவில்லை. மக்கள் பிரநிதியாக அதிகாரியை கேட்டோம். ஒரு அதிகாரி மக்கள் பிரதிநிதியை அழைப்பது கட்டாயம் இல்லை என்று ஆங்கிலை பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கிறார். அப்படி கொடுக்கலாமா. மக்கள் பிரநிதியிடம் சொல்வது அவசியமில்லையா. நாளைக்கு அங்கு வெள்ளம் வந்தால் நான் தானே போய் நிற்க போகிறேன்.
நீர் நிறைந்த குள விழா, நீர் நிறைந்த ஏரி விழா என்று சங்க இலக்கயத்தில் சொல்வார்கள். தண்ணீர் நிறைந்தால் விழா நடத்துவது வாடிக்கை. அதை ரகசியமாக சொல்வதை நான் கேட்பதற்கு என்னனவோ சொல்லி சாயம் பூசுகிறார்கள். எங்களுக்கு இருக்கிற கோவணமே சுய மரியாதைதான். அதையும் விட்டுவிட வேண்டுமா. நான் என்ன தவறாக கேட்டேன். ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே என்று கோரிக்கையாக தான் கேட்டேன். நீர்மேலாண்மைக்கு பெயர் போனவர்கள் தமிழர்கள்.
ஏற்க முடியாது
கீழடி வரலாறு அப்படித்தான் தொடங்கியது. செம்பராக்கம் ஏரி திறப்பு விழாவுக்கு அங்குள்ள எந்த மக்கள் பிரநிதிக்கும் தகவல் சொல்லவில்லை. அப்படியென்றால் அதிகாரிகளுக்கு எது அவசியம். மக்கள் பிரதிநிதியை விட அதிகாரிகள் மேலானவர்களா. சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் இரவு, பகலாக உழைக்கிறார். நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு முன்னேறும்போது அதிகாரிகள் தவறு செய்கிறார்கள் என்று தான் குறிப்பிடுகிறேன்.
இதை திமுக ஆட்சி பட்டியலின மக்களுக்கு விரோத ஆட்சி என்று திசை திருப்ப வேண்டாம். எங்களை முதல் வரிசையில் அமரவைத்து, விருந்து வைக்க சொல்லவில்லை. நான் எங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசியே நீண்ட காலமாகிவிட்டது. அதிகாரிகள் போனை எடுப்பதில்லை. ஆட்சி, அதிகாரத்துக்கு குந்தகம் வரக்கூடாது என்று பொறுப்பு அமைச்சரிடம் தான் பேசுகிறோம். தவறு செய்துவிட்டு அதை நியாயப்படுத்துவதை ஏற்க முடியவில்லை." என்றார்.












Click it and Unblock the Notifications