வேலை செய்தால் செய்தி வரவில்லை.. கீழே விழுந்தால் பெரிய செய்தியாக வருகிறது..தமிழிசை செளந்தராஜன் பேச்சு
நான் கீழே விழுந்தால் பெரிய செய்தியாக போடுகிறார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது. ஆனால் நான் கீழே விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சியில் வருவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல் நன்மைகளை செய்ய ஆரம்பித்தால் நாட்டிற்கு ஆளுநரும், ஆட்டிற்கு தாடியும் எதற்கு என பேச தொடங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிப்புலத்தில் இன்று காலை 8.15 மணிக்கு ஏவப்பட்டது. இந்த ராக்கெட் 3500 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 செயற்கைக்கோள்களை சுமந்தபடி ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவுதல் நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஹைபிரிட் ராக்கெட்
மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இந்த செயற்கை கோள்கள் வானிலை, வளிமண்டல நிலை, கதிர்வீச்சு தன்மை போன்ற தகவல்களை பெற உதவியாக இருக்கும் என தெரிகிறது. கணினி உதவியுடன், மென்பொருளை செயற்கைக்கோளுடன் வடிவமைத்து ஆய்வு மேற்கொள்வதே மாணவர்களின் பணியாகும்.

தடுமாறி விழுந்த தமிழிசை
இந்த நிகழ்ச்சியில் விஞ்ஞானி மயில்சாமி பேசுகையில், இந்த செயற்கை கோள்கள் வானில் ஏவப்பட்டதன் வாயிலாக செயற்கைகோள் புரட்சி ஏற்பட்டு இருக்கிறது. பொறியாளர்களை பள்ளிகளிலேயே உருவாக்க வேண்டும் என்று பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது, கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார், உடனே அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கிவிட்டனர். இதனையடுத்து உடனடியாக அவரது பாதுகாவலர்கள் அவரை தூக்கி விட்டனர்.

தமிழிசை பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் தமிழிசை திடீரென தவறி விழுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழிசை செளந்தரராஜன், கால் தடுமாறி கீழே விழுந்தது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சிகளில் செய்திகளாக வருவதில்லை.

செய்தியாக வருவதில்லை
ஆனால், நான் கீழே தடுமாறி விழுந்தால், அது தொலைக்காட்சிகளில் பெரிய செய்தியாக வருகிறது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், நன்மைகளை செய்ய ஆரம்பித்தால் நாட்டிற்கு ஆளுநரும், ஆட்டிற்கு தாடியும் எதற்கு என பேச ஆரம்பித்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications