அதிமுக உடைந்திருக்கிறது.. ஓபிஎஸ் - இபிஎஸ் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.. எச்சரிக்கும் பாஜகவின் எச்.ராஜா
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி அமையப் போவதாக அதிமுக எம்பி சிவி சண்முகம் பேசிய கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பதிலளித்துள்ளார். அதேபோல் அதிமுகவின் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே, அக்கட்சி நிலைக்கும் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா - டெய்சி ஆடியோ விவகாரம், திருச்சி சூர்யா விலகல், அண்ணாமலை ரஃபேல் வாட்ச் விவகாரம், கோவை பாஜக சார்பாக கொடுக்கப்பட்ட காது கேளாதவர்களுக்கான கருவியின் விலை சர்ச்சை என்று தமிழக பாஜகவில் தொடர்ந்து புயல் வீசு வருகிறது.
ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம், அறிக்கை என்று தமிழக அரசுக்கு எதிராக தீவிரமாக களமாடி வந்த பாஜக, இப்போது திமுக அமைச்சர்களின் கேள்விகளுக்கு விளக்கம் சொல்வது பணியாக மாறியுள்ளது.

ரஃபேல் வாட்ச்
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எச்.ராஜாவிடம், அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எச்.ராஜா, ரஃபேல் வாட்ச் சர்ச்சையே தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் வாட்ச், ஃபர்னிச்சர்கள் அனைத்தும் சொத்து கணக்கில் வராது. அதனால் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய சொத்து கணக்கில் சேராது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் தீவிரமடைந்துள்ளதால், வேண்டுமென்றே கிளப்பியுள்ள சர்ச்சை தான் ரஃபேல் வாட்ச் விவகாரம் என்று தெரிவித்தார்.

அதிமுக கூட்டணி
தொடர்ந்து திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கப் போவதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, சிவி சண்முகம் பாஜகவில் இல்லை. அதனால் பாஜக கூட்டணி பற்றி கருத்து தெரிவிக்க தேவையில்லை. அதேபோல் அதிமுக உடைந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அவர்கள் சேர வேண்டும் என்பது என் விருப்பம். இணைந்து செயல்பட வேண்டும் என்பது என் விருப்பம் என்றாலும், முடிவு அதிமுகவினர் மட்டுமே எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சிறுபான்மை வாக்குகள்
தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை வாக்குகள் வராது என்ற கட்சிகள் பேசுவது பற்றிய கேள்விக்கு, பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகள் வராது என்பது பொய். 1998ல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளில் கூட்டணியாக வெற்றிபெற்றோம். அந்த சமயங்களில் ஜெயலலிதா வழக்குகளால் சிரமங்களை சந்தித்து வந்தார். அதேபோல் அடுத்த சில மாதங்களில் அதிமுக தனது ஆதரவை விலக்கி கொண்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் திமுக ஆதரவளித்தது. இந்த இரு தேர்தல்களிலும் சிறுபான்மை வாக்குகள் வரும் என்பதற்கான சாட்சி என்று தெரிவித்தார்.

குடும்ப அரசியல்
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு, குடும்ப அரசியல் என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து. கேஎன் நேரு, இன்பநிதிக்கும் வாழ்க சொல்லுவோம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் ஒரு தலைவரின் மகனை உள்ளூர் மக்களை விரும்புகிறார்கள், தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்கிறார்கள். அது பரவாயில்லை. ஆனால் கட்சியின் தலைமையே ஒரு குடும்பத்திற்கு மட்டும் தான் என்பது ஏற்புடையதல்ல. வாரிசுகள் அமைச்சராகவோ, எம்எல்ஏ-க்களாகவோ வரலாம். ஆனால் கட்சியின் தலைமைக்கு வந்தால், ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications