சீனுக்குள் வந்தார் ஓபிஎஸ்.. ஒரு மாதமாகவே பாஜகவினர் எங்களோடு பேசி வருவதாக அதிரடி பேட்டி
சென்னை: தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றச் சொன்னார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் சொன்னால் ஏற்பார்களா? என்று கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பாஜக உடன் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், " தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜக கூட்டணியில் இருந்தும்,தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேபி முனுசாமி, பாஜக உடன் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும். 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனிடையே அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஓ பன்னீர்செல்வத்திடம் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றச் சொன்னார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் சொன்னால் ஏற்பார்களா? என்று ஓபிஎஸ் எதிர் கேள்வி கேட்டார்.
மேலும் பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றும், பாஜகவின் நிலைப்பாட்டை அறிவித்த பின் எங்கள் நிலைப்பாடடை அறிவிப்போம் என்றும் ஓபிஎஸ் கூறினார். பாஜக 3வது முறையாக ஆட்சியில் அமரும் தகுதியை பெற்றுள்ளதாக கூறிய ஓபிஎஸ், கடந்த ஒரு மாதமாக டெல்லி பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். டிடிவி தினகரன் உடன் தொடர்ந்து 3 மாதமாக நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
அதிமுக பாஜக உறவு முறிந்தாலும், அல்லது நாடகம் என்றாலும் எங்களுக்கு கவலை இல்லை.. அதிமுக ஒன்றிணைவதே எங்கள் நிலைப்பாடு, இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications