மோடி ஜெயிலுக்கு போவார்.. திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது.. ஆ ராசா ஆவேச பேச்சு
சென்னை: திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால், மோடி ஜெயிலுக்கு போவார்.. தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது என திமுக எம்பி ஆ. ராசா பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி, நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் ஆளும் திமுகவை மிகக் கடுமையாக சாடினார்.

பிரதமர் மோடி பேசும் போது, "திமுகவும் காங்கிரஸும் நாட்டைப் பிளவுபடுத்துவதில் குறியாக இருக்கின்றன. திமுகவும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகளாகும். திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. தங்கள் வாரிசுகளுக்காக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. நான் உங்களுக்காக இருக்கிறேன். சுயநலம் மிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள்.
தமிழகத்துக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம் என திமுகவினர் கேட்கிறார்கள். ராமர் கோயில் தொடர்பான விவாதங்களில் திமுக பங்கேற்கவில்லை. மோடி இருக்கும் வரை உங்கள் மீது யாரும் கை வைக்க முடியாது. தமிழகத்தில் இருந்து பட்டியல் சமூகத்தவரை அமைச்சராக்கி உள்ளோம்" என்றார். திமுக மீதான விமர்சனத்திற்கு அக்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்தியா இருக்காது: முதல்வர் முக ஸ்டாலினும் பிரதமருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக சாடியிருந்தார். இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆராசா பங்கேற்று பேசினார். அப்போது திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் மோடி ஜெயிலுக்கு போவார் என்று ஆ ராசா பேசினார். இது தொடர்பாக ஆ.ராசா பேசியதாவது:-
தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது... ஜாக்கிரதை..என்ன விளையாடுறீங்களா.. நான் இந்தியா இருக்காது என்று விளையாட்டுக்கு சொல்லவில்லை. பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால் இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாக போய்விடும்.
மோடி ஜெயிலுக்கு போவார்: இதை விரும்புகிறதா இந்தியா என்பதை கேட்டு சொல்லுங்கள்.. நீங்கள்(பாஜக) ஊழலே செய்யவில்லை என்றால் உங்கள் ஆட்சிக்கு அதானியும் மற்றவர்களும் 6,500 கோடி ரூபாய் ரகசியாமாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன. அந்த நிறுவனங்களுக்கு நீங்கள் என்னென்ன அனுகூலம் செய்தீர்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் திமுக இருக்காது என்கிறார். நான் சொல்கிறேன்., திமுக 40 இடங்களிலும் வெற்றி பெற்று மத்திய அரசை மாற்றினால் மோடி ஜெயிலுக்கு போவார்.
ஸ்டாலின் போன்ற தலைவருக்கு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது நலத்திட்டத்திற்காக மட்டும் இல்லை. அண்ணா தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றார். அண்ணாவுக்கு இருந்த கடமை தமிழ்நாடு.. தமிழ்மொழி.. கலைஞருக்கு இருந்தது...தமிழ்நாடு தமிழ் வளம். ஆனால் முக ஸ்டாலினுக்கு இருப்பது இந்திய தேசத்தை காப்பாற்ற வேண்டும் ... இந்திய அரசியல் அமைப்பை காப்பாற்ற வேண்டும் என்ற கடமை இருக்கிறது. இந்த பணியை அவர் மேற்கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications