பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சால் ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் போல ஆகிவிடும்.. கனிமொழி அச்சம்!
சென்னை: தொடர்ந்து ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மீது பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு பேசி வருகிறார். இப்படிப்பட்ட வெறுப்பு விதைக்கப்படும் போது நாடு முழுவதும் மணிப்பூராக மாறிவிடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது என திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் தலித் வரலாற்று மாதம் மற்றும் கலைத் திருவிழா 2024ன் வேர்க்கோடுகள் ஓவிய விருது விழா மற்றும் ஓவியக் கண்காட்சி சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் நடைபெற்றது. இதில் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும், சினிமா இயக்குநருமான பா.ரஞ்சித் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கனிமொழி பேட்டி: பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கனிமொழி எம்.பி, "இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் உண்டு. தொடர்ச்சியாக அவர்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்கும் வகையில் ஒரு பிரதமர் பேசுவது நம் நாட்டில் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் லாபத்திற்காக இப்படிப்பட்ட வெறுப்பு, காழ்ப்புணர்வு அவசியமா என்ற கேள்வியை நான் முன்வைக்கிறேன். ஒருவேளை தனக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பிரதமர் இந்த கருத்தை கூறி இருக்கலாம். இப்படிப்பட்ட வெறுப்பு விதைக்கப்படும் போது நாடு முழுவதும் மணிப்பூராக மாறிவிடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது." எனத் தெரிவித்தார்.
வெறுப்பில் இருந்து மனிதநேயத்தை நோக்கி: மேலும் பேசிய கனிமொழி எம்.பி, "ஆணவக் கொலைகள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நிச்சயமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும், ஆணவக்கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுப்பிலிருந்து மனிதநேயத்தை நோக்கி மக்கள் நகரும் காலத்தில் நிற்கிறோம். அதை நோக்கி தான் தேர்தல் முடிவுகளும் இருக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டில் உள்ள பெண்களின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.
பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை: இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினார்கள். அதாவது, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு இது பகிர்ந்து அளிக்கப்படும். ஊடுருவல்காரர்களுக்கு வழங்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார் மோடி.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications