பெண்கள், குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தால்.. குண்டாஸ் தான்.. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்கள் என பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்கள் என பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் ஈடுபடுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
சில கும்பல்கள் இதை தொழில் போல செய்து வருவதாகவும் தொலை தூரங்களில் இருந்து பெருநகரங்களுக்கு அழைத்து வந்து பிச்சை எடுக்க வைப்பதாகவும் கூறப்படுகிறது.
அமமுக உருவாக காரணமே 'அவங்க’ தான்! புள்ளி வைத்து பேசிய டிடிவி தினகரன்! 2023ல் மெகா ட்விஸ்ட்

ஆபரேஷன் மறுவாழ்வு
பொதுமக்களிடம் பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதித்து தொழில் போல சில கும்பல்கள் ஈடுபடுவதாக வெளியாகும் தகவல் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கூடிய தகவலாக இருந்தது. இந்த நிலையில், பிச்சை எடுக்கும் கும்பலை ஒழிக்க ஆபரேஷன் மறுவாழ்வு என்ற பெயரில் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து பலரையும் மீட்டுள்ளது. மேலும் பிச்சை எடுக்கும் கும்பல் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிச்சை எடுக்க வைக்கும்
இது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நகர்ப்புற சாலை சந்திப்புகள், புறவழிச்சாலைகள், சுங்கச்சாவடிகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களையும் சிறார்களையும் வைத்து பிச்சை எடுக்க வைக்கும் தொழிலில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களை சில கும்பல்கள் பிச்சை எடுக்க வைக்கின்றனர்.

16 குழந்தைகள் மீட்பு
இதை தடுத்து நிறுத்த ஆபரேஷன் மறு மாழ்வு என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சனிக்கிழமை (நேற்று) அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் படி 37 மாவட்டங்களிலும் முக்கிய சாலை சந்திப்புகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிச்சை எடுக்கும் தொழில் ஈடுபடுத்தப்பட்ட 726 பேர் மற்றும் 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர். குழந்தைகளையும் பெண்களையும் பிச்சை எடுக்க வைக்கும் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
பிச்சை எடுக்கும் தொழில் ஈடுபட்ட நபர்களை மீட்டு பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்திற்கும் குழந்தைகள் காப்பகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 150 பேர் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏழைப்பெண்கள் மற்றும் குழந்தைகளை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல் தெரிவிக்கலாம்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களுக்கு தொலை தூரங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் நபர்கள் குறித்து தகவல் அறிந்தால் 044-28447701 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும். தகவல் கொடுக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.