நடிகர் நடிகைகளுடன் செல்ஃபி எடுத்தால்.. சென்னை போலீசாருக்கு வார்னிங் கொடுத்த கமிஷனர்
சென்னை: பணியில் இருக்கும் போது முக்கிய பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் வந்தால், அவர்களுடன் செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடக் கூடாது என்றும் மீறினால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையகரம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீப காலமாக போலீசார் ஒரு சிலரின் செயல்பாடுகள், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.

பல்வேறு சட்ட விரோத செயல்களுக்கு காவலர்களே உடந்தையாக செயல்பட்ட செய்திகளும் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகின. எனவே, இதுபோன்ற விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல், போலீசாரின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை சென்னை காவல் ஆணையர் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.
அண்மையில், போலீசார் பணியின் போது செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதேபோல, பணியில் இருக்கும் போது முக்கிய பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் வந்தால், அவர்களுடன் செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடக் கூடாது என்றும் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று எச்சரிக்க்கப்பட்டுள்ளது.
அண்மையில் லோக்சபா தேர்தலின் போது, நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு வந்த போது தனது கடமையை மறந்து பெண் போலீஸ் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினார். பணியின் போது இவ்வாறு நடந்து கொண்டதால் அந்த பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதுமட்டும் இன்றி, பணியின் போது சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி , போட்டா எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். தமிழக காவல் துறையை பொறுத்தவரை சுமார் 35 ஆயிரம் பெண் போலீஸார் உள்ளனர்.
ஆண்களுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் பெண் போலீஸ் உள்ளனர். சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, ரோந்து பணி என ஆண், பெண் போலீசார் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மேலும், ஒருங்கிணைந்து கட்டுப்பாடுடன் சிறப்பாக எப்படி பணியாற்றுவது தொடர்பான என பல்வேறு வழிகாட்டல்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications
