பாட்டுக்கு இசையா? இசைக்கு பாட்டா? இளையராஜா வைரமுத்து விவகாரம் குறித்த கேள்வி.. டென்ஷன் ஆன சினேகன்
சென்னை: இளையராஜா- வைரமுத்து விவகாரம் தொடர்பாக பேசிய போது செய்தியாளர்களிடம் காட்டமாக கவிஞர் சினேகன் பேசினார். பாட்டுக்கு இசையா.. இசைக்கு பாட்டா என சொல்லும் போது நான் படத்திற்கு பாட்டு என போறவன்.. என்ன விட்டுறுங்க என சொல்லுறேன் என கடுகடுப்பாக சினேகன் பேசினார்.
ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த டீசரில் இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடித்த "தங்க மகன்" படத்தில் இடம்பெற்ற "வா வா பக்கம் வா" என்ற பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந்த படத்தில் தன்னுடைய இசையை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கபட்டு வருகிறது. ஒரு தரப்பினர் இளையராஜா செய்தது சரி என்று கூறுகின்றனர். இன்னொரு தரப்பினர் இளையராஜா இப்படி செய்யக்கூடாது என்று பேசி வருகிறார்கள்.
இளையராஜா தொடர்ந்த காபி ரைட் தொடர்பான வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன செய்ய முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரமும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், தான், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கவிஞர் சினேகனிடம் இளையராஜா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர்.
இந்த பேட்டியின் போது சினேகேன் செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு கொஞ்சம் கடுகடுத்த முகத்துடன் பதிலளித்தார். சினேகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இளையராஜா காப்பி ரைட் கேட்கிறார். அது சரியா தவறா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். என் பாட்டை நீங்க உபயோகப்படுத்துறீங்க.. என்கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருக்கலாமே என கேட்கிறார்..
அது எந்த அளவுக்கு எதை அடிப்படையாக வைத்து கேட்கிறார் என்பதை அவர் தொடுத்த வழக்குகளையும் கொடுத்த அறிக்கைகளையும் வைத்துதான் முடிவு செய்ய முடியும். நதிக்கரையில் இருந்து கொண்டு நதியில் என்ன இருக்கிறது என கணக்கு போட முடியாது.. அப்படி போடுவது தப்பும் கூட... அப்போது செய்தியாளர் ஒருவர் வைரமுத்து சொல்வது தவறு என்று சொல்கிறீர்களா? எனக் கேட்டார்.
இதனால், கொஞ்சம் முகம் மாறிய சினேகன், “முதலில் இது காலம் தாழ்த்தி போன ஒரு வழக்கு.. இது ஏற்கனவே கடந்த 20 வருசமாக பேசிட்டு இருக்காங்க.. நீயா நானா.. நான் பெருசா.. நீ பெருசா என பேசிட்டு இருக்காங்க.. என்று.. அவுங்க இரண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். எங்க இந்த காழ்ப்புணர்வு தொடங்கியது என்று நமக்கு தெரியாது. வேடிக்கை பார்க்கிற மனிதர்களாக இருக்கிறோம்..
எழுத்து எப்படி ஒரு கவிஞனுக்கு முக்கியமோ.. அதே அளவுக்கு இசை ஒரு இசை அமைப்பாளருக்கு முக்கியம்.. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.. பாட்டுக்கு இசையா.. இசைக்கு பாட்டா என சொல்லும் போது நான் படத்திற்கு பாட்டு என போறவன்.. என்ன விட்டுறுங்க என சொல்லுறேன்.. நீங்கள் ஏன் என்னை ஒருபக்கம் சாய்க்க முயற்சிக்கிறீர்கள்.. என்னை ஒருபக்கத்திற்கு ஆளாக பார்க்க முயற்சிப்பதே முதல் குற்றம்.
அதை எப்போதும் செய்யாதீங்க.. இவர் இவருக்கு பேசுவார்.. இவர் இவருக்கு பேசுவார் என்ற மனப்பான்மையில் கேள்வி கேட்பதை நிறுத்துங்க முதலில்.. அதுதான் நல்லது.. இளையாராஜா பாட்டை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தும் போது.. எனது கற்பனையும் வந்துட்டு போகுது.. என்கிட்ட குறைந்தபட்சம் அனுமதியாவது கேட்கலாமா என இளையராஜா கேட்பதில் எனக்கு தப்பா தோன்றவில்லை..
இளையராஜா பாடலை நிறைய பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர் கேட்கிறார். இளையராஜாவிடம் அனுமதி பெற்று பல இடங்களில் பாடல்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு அவர் வழக்கு போடவில்லை.. பணம் பெற்றாரா? என்றெல்லாம் தெரியாது.. ஆனால் குறைந்தப்ட்சம் என்னிடம் அனுமதி கேளுங்கள் என்கிறார் அவ்வளவுதான்” என்றார்.












Click it and Unblock the Notifications