நான் திராவிடன்.. திமுகவிற்காக பிரச்சாரம் செய்ய தயார்.. தமிழிசையை பங்கமாக கலாய்த்த எஸ்வி சேகர்
சென்னை: பாஜகவில் இருந்து நான் வெளியேறி விட்டேன்.. நான் ஒரு திராவிடன். பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுகவிற்கு பிரசாரம் செய்வேன். பிராமணர்கள் அல்ல யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண். தமிழ்நாட்டில் பாஜக மலரவே மலராது.. எனக்கு ஒரு கட்சி அடையாளம் தேவையில்லை; கட்சிக்குதான் நான் தேவை என்று நடிகர் எஸ்வி சேகர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் எஸ்வி சேகர் பேசுகையில், "நடிகை கஸ்தூரி பேசிய பேச்சு மிகப் பெரிய தவறு. ஏனென்றால் எனக்கு என்ன வேணும் என்றுதான் கேட்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களை கை காட்டி பல விஷயங்களை பேசுவது நல்லதல்ல.. அதுவும் ஒரு சமுதாய கூட்டத்தில் அரசியல் பேசுவது, நல்லதல்ல. நான் நேற்றே பாஜகவில் இருந்து விலகி வந்துவிட்டேன். நான் மெம்பர்ஷிப்பை ரெனிவில் செய்யவில்லை.. நான் 10 வருடம் இருந்து பட்டபாடு போதும்.. தேவையில்லாத சாயத்தை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டாம்..

நான் பாஜகவில் இருந்த போது மட்டுமின்றி 25 வருடமாகவே இந்த கொடியுடன் (தேசிய கொடி) இருக்கிறேன்... நான் ஒரு இந்தியன்.. தமிழ்நாட்டில் தமிழன்.. எனக்கு ஒரு கட்சி அடையாளம் தேவையில்லை; கட்சிக்குதான் நான் தேவை. கட்சி என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் சந்தோஷம் தான்.. மிஸ்டு கால் கொடுத்து மெம்பர்ஷிப் சேர்க்க சொன்னால், 50 வருடம் ஆனாலும் கூட தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. சும்மா மிஸ்டு கால் கொடுக்கலாம்.. சிம் கார்டுவாங்கலாம். அதற்கு மேல் எந்த பிரயோஜனமும் இல்லை..
அண்ணாமலையை வந்து நான் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர் என்று சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.. அண்ணாமலை தமிழக அரசியலில் மட்டுமல்ல.. தரம் உள்ள எந்த இடத்திலும் இருக்க முடியாது. கடந்த 10 வருடத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேல் எனக்கு நஷ்டம்.. எனக்கு 10 வருடமாக பட வாய்ப்புகளே வரல.. பிஜேபி படம் எடுப்பார்களே என்றார்கள்.. ஆனால் அந்த படத்தில் எல்லாம் என்னால் நடிக்க முடியும்? அதுவேற மாதிரி படம்.. தமிழ்நாட்டு பிஜேபி எடுக்கிற படத்தில் நடிக்க முடியாது..
இன்றைக்கு கூட தமிழிசை சொல்கிறார்.. சுடுமணலிலும் தாமரை மலரும் என்று.. அது எப்படி சார் மலரும்.. குளத்திலேயே மலராது என்கிற போது, கான்ங்ரீட்டில் எப்படி மலரும்.. அவங்க சுனாவிற்கு சுனா.. பானாவிற்கு பானா என்று தமாசாக பேசிக்கொண்டிருக்கிறாங்க.. ஆனால் ஒரு கவுன்சிலர் கூட ஜெயிக்காதவங்க கூட கவர்னர் ஆகிவிட்டால் இப்படித்தான் பேச்சு காமெடியாக இருக்கும்..
நான் தீவிரமாக பாஜக ஆதரவாளராக இருந்தேன். பிரதமர் மோடி என்னை அழைத்தார்கள்.. 10 வருடமாக என்னை கொஞ்சம் கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை.. கட்சிக்குள் ஒரு பிரச்சாரத்திற்கு கூப்பிடவில்லை.. நான் ஜாடிக்குள்ள போட்ட பூதம் போல் என்ன சும்மா இருக்க வேண்டும்.. ஒன்று என்னால் கட்சிக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும்.. அவர்கள் என்னை தேவை இல்லை என்கிறார்கள்..
தேவையில்லாத இடத்தில் ஏன் இருக்க வேண்டும். மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்.. அதனால் தான் நான் கட்சி மெம்பர்ஷிப்பை ரெனிவல் பண்ணவில்லை.. மோடியிடம் கேட்டு முடிவு செய்யலாம் என நினைத்தேன்.. ஆனால் இப்போது பாஜகவில் இருந்து வந்துவிட்டேன்.. இனி என் முகத்தில் எந்தவித சாயமும் கிடையாது.. நான் ஒரு இந்தியன், தமிழன், திராவிடன்.. பிராமணர்களுக்கு உண்டான நல்ல விஷயங்களை செய்தால், நான் திமுகவிற்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்வேன்.. அந்தணர் நல வாரியம் அமைக்க வேண்டும். பிராமணர்களுக்கு நான்கு எம்எல்ஏ சீட், ews 10 சதவீத இடஒதுக்கீடு .. இதை செய்தால் திமுகவிற்கு பிரச்சாரம் செய்வேன்." இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications