வீடு, நிலம் வாங்கியவர்களை வில்லங்கமாக்கும் விதிமீறல்.. தலையெழுத்தையே மாற்றும் சின்ன மாற்றம்.. உஷார்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை வேறு நபருக்கு விற்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் இருவேறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.75 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் இடம் வாங்கி போட்ட முதியவர்களை குறிவைத்து மோசடி நடக்கிறது. ஆள் மாறாட்டம் செய்து இடத்தை பறிக்கும் கும்பலை போலீசார் அடுத்தடுத்து கைது செய்து வருகிறார்கள். அவ்வப்போது இடத்தை நேரில் சென்று பார்ப்பதுடன், நிலத்தின் நிலை குறித்து ஆன்லைனில் பார்ப்பது நல்லது.

இல்லாவிட்டால் பல வருடம் கழித்து சட்டப்போராட்டம் நடத்தும் நிலை வரலாம், வயதானவர்கள் பெயரில் மோசடி ஆவணங்கள் தயாரிப்பது, இறந்தவர்கள் பெயரில் திடீரென வாரிசு சான்றிதழ் வாங்கி வந்து நிலத்தில் பங்கு கேட்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே நிலம் வாங்குவோர் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த 63 வயதாகும் அருணா என்பவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் அண்மையில் புகார் அளித்தார். அதில் அவர், "புழல் புத்தகரம் பகுதியில் உள்ள எனக்கு சொந்தமான நிலத்தை சிலர் போலியான ஆவணங்கள் தயார் செய்து, ஆள்மாறாட்டம் மூலம் வேறு நபருக்கு விற்று ரூ.75 லட்சம் மதிப்புள்ள என் நிலத்தை அபகரித்து விட்டார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடி தொடர்பாக புத்தகரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த இனியன் (34) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
இதனிடைய இதேபோன்ற ஒரு சம்பவம் விழுப்புரம் மாவட்டத்திலும் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 49 வயதாகும் மாலதி, தன்னுடைய உறவினரான கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் வீடு கட்டுவதற்காக இடம் வாங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
இந்நிலையில் கோபாலகிருஷ்ணன், தனக்குதெரிந்த ரகு, அவரது மனைவி தேவி, இளங்கோ ஆகியோருடன் சேர்ந்து கொரட்டூர், மதனாங்குப்பத்தில் உள்ள காந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான ஓர் இடத்தை வாங்குவதற்காக விலை பேசியிருக்கிறார். அதன்பேரில் மாலதி கடந்த 24.09.2021 அன்று முன் பணமாக ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார். மேலும், பத்திரப்பதிவு செய்வதற்காக முகமது அனிபா என்பவருக்கும் தனியாக ரூ.2.30 லட்சம் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் பத்திரப்பதிவு செய்யாமல் ஏமாற்றி வந்தார்களாம். பெற்ற பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் மிரட்டி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாலதி இதுகுறித்து நொளம்பூர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார்,
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து புகாருக்குள்ளான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த இளங்கோ (42), அதே பகுதி கோபாலகிருஷ்ணன் (58), சென்னை அண்ணாநகர் மேற்கு முகமது அனிபா (55) ஆகிய 3 பேரைக் கைது செய்தார்கள். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications