தமிழகம் சுற்றும் வாலிபன்! 2022ல் முதல்வர் ஸ்டாலின் 8,549 கிமீ பயணம்! 647 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!
சென்னை: 2022 ஆம் ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் 8,549 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார்.
இதேபோல் இந்த ஒரு வருடத்தில் மட்டும் 647 நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்றிருக்கிறார். அதில் 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். 96 கட்சி நிகழ்ச்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பயணங்கள் குறித்து திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் பேசியதாவது;

8,549 கிலோ மீட்டர் பயணம்
நேற்றைய தினம் நான் மாலையில் என் இல்லத்தில் அமர்ந்திருந்த நேரத்தில், என்னுடைய உதவியாளர்கள் ஒரு தாளை கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்கள். என்ன என்று படித்துப் பார்த்தேன்; கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் நான் தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் பயணம் செய்தது, 8 ஆயிரத்து 549 கிலோ மீட்டர் தூரம். அந்தப் பயணத்தில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்- 647. இதில 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள்! கட்சி நிகழ்ச்சிகள்- 96.

1 கோடி பேருக்கு நலத்திட்டம்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காரணத்தால், அதில் பயனடைந்தவர்கள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 3 லட்சத்து, 74 ஆயிரத்து 355 நபர்கள்! ஓராண்டு காலத்தில் ஒரு கோடிப் பேருக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்று சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் ஒரு வருடத்தில். இதற்கு மத்தியில், எனக்கு கொரோனா பாதிப்பு வந்தது, சிறிது உடல் நலிவுற்றேன் - கால் வலி வந்தது, சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

மக்கள் பணி நிற்கவில்லை
அந்த சூழ்நிலையில் கூட என்னுடைய பயணம் தடைபடவில்லை, மக்கள் பணி நிற்கவில்லை, நிற்கவில்லை என்பதல்ல நிற்கவே நிற்காது. அதுதான் உண்மை. நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதாக இருந்தாலும் - நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதாக இருந்தாலும் - அதனுடைய உண்மையான அளவுகோல் என்ன? ஏழைகளின் சிரிப்பும்- இங்குள்ள நான் காணக்கூடிய மகளிரின் மகிழ்ச்சியும்தான் அதற்கு உண்மையான அளவுகோல்! மக்கள் மகிழ்ச்சி அடைந்தால் - அவர்களது மனது நிறைந்தால் போதும்.

உதயநிதிக்கு அட்வைஸ்
நிறைவாக, நான் கூற விரும்புவது, நான் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தபோது, இந்த மகளிர் சுய உதவிக்குழுவினுடைய துறையை என் கைவசம் வைத்திருந்தேன். இன்றைக்கு தம்பி உதயநிதி கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதற்காக தம்பி உதயநிதியை நான் உங்கள் அனைவரின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்த சுய உதவிக் குழுக்களை மேம்படுத்தக்கூடிய வகையில் நீங்கள் அதற்காக பாடுபட வேண்டும், பணியாற்ற வேண்டும், அதற்குரிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று என்னுடைய அன்பான வேண்டுகோளை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துவைத்து, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.












Click it and Unblock the Notifications