அனாகாபுத்தூர் ஏழைகள் மீது பாயும் பொக்லைன் எந்திரம் ஏன் பெரு நிறுவனம் மீது பாயவில்லை? சிபிஎம் சண்முகம்
சென்னை: திமுகவின் கடந்த 4 ஆண்டுகால ஆட்சி நிர்வாகம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் திருப்திகரமாக முறையில் செயல்பட்டது என்று என்னால் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். அனாகாபுத்தூரில் ஏழை எளிய மக்கள் மீது பாயக்கூடிய பொக்லைன் எந்திரம் ஏன் கரைக்கு அந்த பக்கம் இருக்கின்ற காசா கிராண்ட், மாதா என்ஜினீயரிங்க கல்லூரி மீது பாயவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
CPM மாநில செயலாளர் பெ. சண்முகம் ஒன்இந்தியா அரசியலுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆளும் திமுக அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்து பெ சண்முகம் கூறியிருப்பதாவது:-

திருப்திகரமான முறையில் செயல்படவில்லை
முதலாளித்துவ கட்சியின் ஆட்சி என்கிற முறையில் பிளஸ் அண்ட் மைனஸ் இருக்கத்தான் செய்கிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பாதி நிறைவேற்றியிருக்கிறார்கள். அதிலேயே இன்னும் சில வாக்குறுதிகள் இருக்கு. அதை நிறைவேற்ற வேண்டும். ஆட்சி நிர்வாகம் பற்றிய மதிப்பீடை பொறுத்தவரை பல விஷயங்களில் அதிகாரிகள் ஒரு திருப்திகரமான முறையில் செயல்படவில்லை என்று நான் கூறுகிறேன்.
உதாரணத்திற்கு காவல்துறையை எடுத்துக்கொண்டால், மக்களுக்கு ஏற்கனவே அரசியல் சாசனம் வழங்கியிருக்கின்ற அடிப்படை உரிமைகளை மதித்து நடத்த வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு. ஆனால் அதற்கு மாறாக தான் காவல்துறையின் கொள்கை இருக்கிறது. விசாரணைக்கு வரும் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவது போன்ற கழிப்பறை எப்படி கட்ட முடியும். ஏன் அந்த கழிப்பறையில் இன்ஸ்பெக்டரோ அல்லது எஸ்.ஐயோ வழுக்கு விழுவது இல்லை.
சட்டத்துக்கு விரோதமானது
காவல்துறையினரின் சித்ரவதையின் காரணமாகவே கைதிகளின் கால், கைகளில் மாவுக்கட்டு கட்டப்படுகிறதே தவிர அவர்கள் வழுக்கி விழுந்துவிட்டார்கள் என்பது எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை. இது எல்லாம் சட்டத்துக்கு விரோதமானது. சட்டப்படி குற்றத்தினை நிரூபிக்க வேண்டியது தான் காவல்துறையின் பொறுப்பு. இதை விட்டுவிட்டு மூன்றாம் தரமான வழிமுறைகளை இப்போது இருக்கிற காவல்துறை அதிகாரிகள் கடைப்பிடிக்கிறார்கள். இது சட்டவிரோதமானது.
இதையெல்லாம் காவல்துறையின் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கையாக வைக்கிறது. காவல்துறையின் கொள்கை மாற வேண்டும் என்றால் அரசாங்கம் நினைத்தால் தான் மாற்ற முடியுமே தவிர அதிகாரிகளால் மாற்ற முடியாது. தமிழகத்தில் நல்லது நடந்திருந்தால் அதற்கு ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டது போல, சட்டவிரோத செயல் நடந்தாலும் அதற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஏழை மக்கள் மீது பாயும் பொக்லைன் எந்திரம்
வெறும் கட்சி மட்டும் செய்கின்ற வேலையில்லை. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் முதலில் பாதிக்கப்பட்ட மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். அந்த மக்கள் அங்கிருந்து நாங்க வெளியேற மாட்டோம் என்று சொல்லியிருந்தால் நாங்க அவர்களுக்கு துணையாக இருந்திருப்போம். திமுகவுடன் கூட்டணியில் இருக்கோம் என்பது பற்றி எல்லாம் கவலைப்பட்டிருக்க மாட்டோம். அங்கே இருந்து அவர்களை வெளியேற்றுவதில் கடுகு அளவு நியாயம் கூட கிடையாது.
அனாகாபுத்தூரில் ஏழை எளிய மக்கள் மீது பாயக்கூடிய பொக்லைன் எந்திரம் ஏன் கரைக்கு அந்த பக்கம் இருக்கின்ற காசா கிராண்ட், மாதா என்ஜினீயரிங்க கல்லூரி மீது பாயவில்லை என்று நான் கேட்டு இருக்கின்றேன். மக்களுடைய குடியுரிமை, வாழ்வுரிமை என்பது எல்லாவற்றிலும் முக்கியமானது. என்னுடைய நிலம், என்னுடைய உரிமை அடாவடித்தனமாக அரசாங்கம் வந்து காவல்துறையை வைத்து சட்டத்தை காட்டி மிரட்டி எங்களை வெளியேற்றுவது என்பது எந்த வகையில் ஏற்கமுடியும்.
பரந்தூர் விமான நிலையம் தேவையில்லை
பரந்தூர் விமான நிலையம் எதற்கு.. 13 ஏரியை மூடிவிட்டு அதில் விமான நிலையம் கட்டினால் தண்ணீர் முழுவதும் எங்கு போகும். ஏற்கனவே இருக்கக் கூடிய கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முதலாளியின் விருப்பத்தை அரசு செய்து கொண்டு இருக்கிறது. மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
அதிக மூலதனம் வந்தது என்று புள்ளி விவரங்கள் எல்லாம் வெளியிட்டார்கள் அல்லவா.. எத்தனை பேருக்கு புதிதாக வேலை கிடைத்தது என்று சொல்ல முடியுமா?... நான்கு ஆண்டுகாலமாக வெளிநாட்டு போகிறது, ஒப்பந்தம் போடுறுது எல்லாம் நடந்திருக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் வந்திருக்கு?.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications