கடந்துபோன நேரம்.. டிஎன்ஏ பரிசோதனை செய்வதில் தாமதம்! மாயமான சைதை துரைசாமியின் மகன் நிலை என்ன?
சென்னை: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேச மாநிலத்தில் விபத்தில் சிக்கி மாயமாகி உள்ளார். அங்கு கிடைத்த மூளையின் திசு வெற்றி துரைசாமியுடையதா? என்பதை கண்டறிய அவரது குடும்பத்தினருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் அந்த பரிசோதனை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. அதிமுக பிரமுகராக இருக்கிறார். இவரது மகன் பெயர் வெற்றி துரைசாமி. இவர் ‛என்றாவது ஒருநாள்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்நிலையில் அடுத்ததாக இயக்கும் படத்துக்காக படப்பிடிப்பு தளங்களை பார்க்க இமாச்சல் பிரதேசம் சென்றார்.

இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் நிலை என்ன என்பது தெரியாத நிலையில், 7-வது நாளாக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெற்றி துரைசாமி தனது உதவியாளரான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத்துடன் அங்கு சென்றார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் வாடகை காரில் பயணித்தனர். காரை டென்சின் என்பவர் ஓட்டினார். சிம்லா செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கியது.
அதாவது கசாங் நலா என்ற பகுதியில் டிரைவர் டென்சின் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதில் டிரைடர் டென்சின் இறந்தார். கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார். இந்நிலையில் தான் கடந்த ஒரு வாரமாக வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தேடுதல் பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், நீச்சல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை சுற்றி 3 கிலோமீட்டர் தூரத்தில் தேடியும் வெற்றி துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
இதற்கிடையே தான் பாறை இடுக்கில் மூளையின் திசு கிடைத்தது. அது வெற்றி துரைசாமி உடையதா என்பதை கண்டறிவதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெற்றி துரைசாமி அவரது மனைவி அல்லது வெற்றி துரைசாமியின் மகனுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். இதுதொடர்பான விபரங்களை இமாச்சல் பிரதேச மாநில போலீசார் சென்னை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
தற்போது சைதை துரைசாமி இமாச்சல் பிரதேசத்தில் உள்ளார். இந்நிலையில் தான் வெற்றி துரைசாமியின் சென்னை குடும்பத்தினரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இவர்கள் மாலை 5 மணிக்கு பிறகு மருத்துவமனை சென்றனர். டிஎன்ஏ பரிசோதனை என்பது மாலை 5 மணிக்கு பிறகு செய்வது இல்லை எனக்கூறி மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. இதனால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நாளை காலையில் மருத்துவமனையில் வெற்றி துரைசாமியின் குடும்பத்தினருக்கு டிஎன்ஏ பரிசோதனை என்பது மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பரிசோதனையின் முடிவு என்பது நாளை மாலையில் தெரியவரும். இதையடுத்து இமாச்சல பிரதேசத்தில் கிடைத்த மூளை திசுவின் டிஎன்ஏவும், வெற்றி துரைசாமியின் குடும்பத்தினரின் டிஎன்ஏவும் ஒப்பீடு செய்யப்படும். இரண்டுக்கும் ஒற்றுமை இருக்கும் பட்சத்தில் அது வெற்றி துரைசாமியின் மூளை திசு என்பது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications