"மலைக்க வைத்த பத்திர பதிவுத்துறை".. தமிழக வரலாற்றில் முதல் முறை! ஒருநாள் வருவாய் மட்டும் இவ்வளவா?
சென்னை: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் பத்திரப்பதிவுத்துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது. நேற்று ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த நாள் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் தமிழக பத்திரப்பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் புதிதாக ஒரு வீடு, நிலம் வாங்கும்போதும், அதற்கான பத்திர பதிவு செய்யும்போதும் நல்ல நேரம், சுபமுகூர்த்த நாட்களை பார்ப்பது வழக்கமாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பலரும் குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினத்துக்காக பத்திரப்பதிவு கூட செய்யாமல் காத்திருக்க கூட செய்கின்றனர்.

மேலும் சுபமுகூர்த்த தினத்தில் ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் பத்திரப்பதிவு செய்ய முயலும்போது கூட்ட நெரிசல் ஏற்படும். மேலும் பத்திரப்பதிவு செய்ய முடியாமலும் போகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினங்களில் கூடுதலாக பத்திரவுப்பதிவுக்கான டோக்கன்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளாகும். இது மிகவும் விசேஷமாகும். இந்நிலையில் தான் நேற்று ஏராளாமனவர்கள் பத்திரப்பதிவு செய்ய தயாராகி வந்தனர். மேலும் அரசு சார்பில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டது.
அதாவது ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்பட்டது. அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று வழக்கத்தை விட அதிகமானவர்கள் பத்திரப்பதிவு செய்தனர். இவர்களின் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் உதவியாக இருந்தன. இந்நிலையில் தான் நேற்றைய தினம் நடந்த பத்திரப்பதிவு மூலம் தமிழக அரசுக்கு இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் அதிக வருவாய் கிடைத்துள்ளது. அதாவது நேற்று ஒரேநாளில் ரூ.224.26 கோடி பத்திரப்பதிவு துறை மூலம் தமிழக அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. இதன்மூலம் பத்திரப்பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.












Click it and Unblock the Notifications