30 வயசுக்கு மேல் ஆகிடுச்சா உங்களுக்கு?.. இந்த ஸ்கீம் உங்களுக்குத்தான்.. தமிழ்நாடு அரசு செம ஸ்மார்ட்!
சென்னை: சில நாள்கள் முன்பாக 'சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்ட'த்தை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்திருக்கிறார்.
ஏற்கெனவே 'மக்களைத் தேடி மருத்துவம்', 'நம்மைக் காக்கும் 48' திட்டம் எனப் பல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சியில் செயல்படுத்தி வருகிறார்.

மேலும் சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதியதாக 'சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத்திடம்' நடைமுறைக்கு வந்துள்ளது.
அது என்ன சிறுநீரகம் காக்கும் சீர்மிகுத் திட்டம்? இதனால் யாருக்குப் பயன்? வேறு மருத்துவத் திட்டங்களில் இது எந்த வகையில் வேறுபடுகிறது?

சில விளக்கங்களைத் தமிழ்நாடு அரசு பொதுச்சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டுப் பெற்றோம். இத்திட்டம் குறித்து அவர், "இந்த 2023-24 ஆண்டுக்கான நிதிநிலையில் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை அறிவித்திருந்தது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், 30 வயதைக் கடந்தவர்கள் பலருக்கும் சிறுநீரகக் கோளாறு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
ஆகவே அந்த வயதுக்கு மேலானவர்களுக்கு வரப் போகின்ற பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை அளிப்பது. இதன் மூலம் அவர்களுக்குப் பிற்காலத்தில் வரப்போகின்ற பெரிய பாதிப்பைத் தடுத்து, நல்ல உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தித் தருவது. இவைதான் இத்திட்டத்திற்கான அடிப்படை.

இதில் நாங்கள் என்ன செய்வோம் என்றால், 30 வயதுக்கு மேலானவர்களுக்கு ஒரு அடிப்படை பரிசோதனையைச் செய்வோம். அவர்களின் சிறுநீரில் அல்பமின் அளவு எவ்வளவு வெளியேறுகிறது? மேலும் தொற்று ஏதாவது உள்ளதா? வெளியேறும் சிறுநீரின் நிறம் எந்த மாதிரியாக உள்ளது என்பதை எல்லாம் பரிசோதிப்போம்.
அதில், சாதாரணமான மருத்துவ அறிக்கை வந்தால் விட்டுவிடுவோம். ஆனால், சிறுநீரகக் கோளாறு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், அது என்ன மாதிரியான கோளாறுகளை உருவாக்கும் எனச் சோதிப்பதற்கு வேறு சில பரிசோதனைகள் இருக்கின்றன. உடனே அதை எடுப்போம்.
அந்த அறிக்கையைப் பார்த்துவிட்டு, அதன் பிறகு நரம்பியல் நிபுணரின் ஆலோசனை பெற வேண்டும் என்றால் அதையும் கேட்டுப் பெறுவோம்.
அதாவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது சிறுநீரகக் கோளாறு என்ற எல்லையை ஒருவர் பிற்காலத்தில் அடைந்துவிடாமல், முன்கூட்டியே தடுப்பதற்காக ஒரு மருத்துவ வழிமுறையை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது. அதன் மூலம் ஒருவரின் வாழ்க்கையில் வரப் போகின்ற பெரிய பாதிப்பைத் தடுப்பது. இவைதான் இதன் சிறப்பு என்று சொல்வேன்" என்கிறார்

எந்த அரசு மருத்துவமனைகளில் எல்லாம் இத்திட்டம் செயல்படுகிறது?
"முன்னதாகவே மாவட்டம் தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டவர்களுக்கு இலவசமாகவே டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் மூலமாகவும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு அரசு வீடு தேடிச் சென்று மருத்துவம் செய்து வருகின்றது.
இதற்கு மேலாக முழுவதுமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையையும் செய்து வருகிறது. இதுவும் இலவசமாகவே செய்யப்பட்டு வருகின்றது. இதில்கூட சில நோயாளிகளுக்குத் தடைகள் உள்ளன. Hemodialysis செய்ய வேண்டும் என்றால், வாரத்தில் 3 அல்லது 4 நாள்கள் மருத்துவமனைக்குச் சென்றுவர வேண்டும். நோயாளி தனியாகச் செல்ல முடியாது. அழைத்துச் செல்ல உடன் ஒருவர் தேவைப்படும்.
இப்படி ஒரு நோயாளி முற்றிய நிலையை அடையக் கூடாது. அவரை ஆரம்பக்கட்டத்திலேயே பாதுகாக்க வேண்டும். அவரது நோயின் அறிகுறி முதல் கட்டத்திலேயே கண்டறிந்து தடுக்கப்பட்டால், பல விதங்களில் அவர் பலனடைவார். அதற்காகத்தான் இந்த சிறுநீரகம் காக்கும் சீர்மிகு திட்டம்.

இதில் ஏற்கெனவே 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோய் வருவதற்கான முதல் நிலையில் உள்ளவர்களை எல்லாம் நாங்கள் கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு எல்லாம் இந்த சிறுநீரக பரிசோதனையும் எடுத்து வருகிறோம்.
இதன் அடுத்த கட்டமாக 30 வயதைக் கடந்த அனைவருக்கும் நமது ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு மருத்துவமனைக் கல்லூரிகள் என அனைத்திலும் இந்தச் சோதனையைச் செய்துகொள்ளலாம். அவருக்குச் சோதனை முடிவில் அறிகுறிகள் தென்பட்டால், அதற்கு அடுத்தகட்ட சோதனையையும் அவர் செய்து கொண்டு சிகிச்சையைத் தொடரலாம்.
முன்னதாகவே அமைச்சர் மா.சுப்பிரமணியம் சேலத்தில் கடந்த 10.07.2023 அன்று இதனைத் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்தப் பரிசோதனைகள் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் துணை சுகாதார நிலையங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 5 லட்சம் பேருக்கு இந்தச் சிறுநீரகப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் நோய்க்கான அறிகுறி தென்பட்ட 3 ஆயிரம் பேருக்கு அடுத்த கட்ட சோதனைக்கு அனுப்பி உள்ளோம். இதன் தொடர்ச்சியாகத்தான் சில நாள்கள் முன்னதாக ஓமந்தூரார் மருத்துவமனையில் இதனை அமைச்சர் மா.சு தொடங்கி வைத்துள்ளார். அவர் இதனை நகர்ப்புறங்களிலும் தொடங்க வேண்டும் என விரும்பிச் செய்துள்ளார்.
இந்தச் சோதனைகளை 30 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் செய்து கொள்வதன் மூலம், அவருக்கு சிறுநீரகக்கோளாறு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவர் பெரிய பாதிப்பிலிருந்து தன்னை தற்காத்துக் கொண்டு பழைய மாதிரியான உடல் ஆரோக்கியத்தைப் பெற்று அவர் சகஜமான வாழ்க்கையைத் தொடர முடியும். அதற்கு மிகமிக முக்கிய தேவை விழிப்புணர்வு" என்கிறார் டாக்டர் செல்வ விநாயகம்.












Click it and Unblock the Notifications