பறந்தது அதிரடி ஆர்டர்! “மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் ஏன் இல்ல?” கவனித்து கேட்ட உதயநிதி!
சென்னை: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டே, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவு இடம்பெறவில்லை. இந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் கவனித்து நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டதன் பேரில் தற்போது, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் உயரிய ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கிட 2019ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் ஒலிம்பிக் போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அகில இந்திய பல்கலைகழங்களுக்கிடையேயான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் இடம் பெற்றிருந்தன.
தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் / வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் பிரிவு இடம் பெறவில்லை. தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் / வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைகள் வழங்கப்படாத குறையினை கண்டறிந்து அதனை களைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் / வீராங்கனைகள் மூத்தோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.5 இலட்சம், ரூ.3 இலட்சம் மற்றும் ரூ.2 இலட்சம் எனவும் இளையோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.3 லட்சம், ரூ.2.00 லட்சம் மற்றும் ரூ.1.50 லட்சம் எனவும் வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications