விடிய விடிய விடாது கொட்டிய கனமழை..பெருகிய வெள்ளம்..சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூரில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூரிலும் கனமழை நீடிக்கிறது. மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. சென்னையில் பல பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் காலை முதலே லேசான சாரல் மழை பெய்ததால் சென்னை வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.

தெற்கு வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக காலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி, வள்ளுவர்கோட்டம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நகரம் முழுவதும் பரவலாக பெய்த மழையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மாலையில் மழை சற்றே ஓய்ந்தாலும் இரவு 10 மணிக்கு மேல் சாரலுடன் தொடங்கிய மழை கனமழையாக மாறி விடிய விடிய கொட்டித்தீர்த்தது. நேற்று இரவு தொடங்கி காலை வரைக்கும் மழை பெய்தது. பல இடங்களில் இடி மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. மழை நீடிப்பதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்திலும் விடிய விடிய மழை கொட்டிவருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பல இங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கனமழை நீடிப்பதால் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை பெய்தது. அதிகாலையிலும் மழை நீடிப்பதால் இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும் விடாது மழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ஜூன் மாதத்தில் பெய்துள்ள மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுவதால் மக்கள் நிம்மதியமடைந்துள்ளது. இது அரிதான மழை என்று வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications