வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கலா? தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஐடி ரெய்டு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 8 க்கும் மேற்பட்ட அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டது. லோக்சபா தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ஏதும் நடக்கிறதா என பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இதில் வருமான வரித்துறையினரும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் யாரும் பதுக்கி வைத்துளனரா? என்று சோதனை செய்து வருகின்றனர். இதற்காக வருமான வரித்துறை ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்து பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
44 இடங்களில் சோதனை: அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று கூட நெல்லை திமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், நெல்லை, 44 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
8 முன்னணி அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளிலும், அவர்கள் தொடர்புடைய தொழில் ரீதியிலான அலுவலகங்கள், உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது. அரசின் குடிநீர் வழங்கல் வாரியம், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.
தொடர் கண்காணிப்பு: முக்கிய பிரமுகர்கள் வீடுகள் தொடர் கண்காணிப்பில் இருக்கிற காரணத்தால், அரசு ஒப்பந்ததாரர்கள் மூலமாக பணப்பட்டுவாடா நடக்கிறதா? என்ற சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துள்ளனர். இதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் பல பிரிவுகளாக பிரிந்து முக்கிய இடங்களில் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
பணப்பட்டுவாடா நடப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சோதனை நடத்துவதற்கு வசதியாக வருமான வரித்துறையினர் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை விருகம்பாக்கத்தில் சோதனை: நேற்று திருநெல்வேலியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வருமான வரித்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருவதாகவும், பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் வந்தாலும், அந்த புகாரில் உறுதித்தன்மை இருந்தால் மட்டுமே அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொள்கிறார்கள்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்ளபட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், இதேபோல் கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications