சாரதா மோட்டார்ஸ் அலுவலகம், வீடுகளில் நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை..வரி ஏய்ப்பு செய்ததாக புகார்
சென்னை: சாரதா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில்
சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
டெல்லியை தலைமையிடமாக கொண்டு சாரதா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

சாரதா மோட்டார்ஸ் நிறுவனம் கார் மற்றும் கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படும் சைலன்சர், ஷாக் அப்சார்பர் உள்ளிட்ட உதிரி பாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி வளாகத்தில் உள்ள சாரதா மோட்டார் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தொழிற்சாலையில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்தநிலையில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான வீடு, தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை ஆர்ஏபுரம் சத்யதேவ் அவென்யூவில் சாரதா மோட்டார்ஸ் நிறுவன பங்குதாரரான கிருஷ்ணகுமார் சர்மா என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவில் பறிமுதல் செய்த சொத்துக்கள் மதிப்பு, வரிஏய்ப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications