கடலூரில் திமுக மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு.. போலீஸ் குவிப்பு
சென்னை: கடலூரில் திமுக மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாளை லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், திமுகவை சேர்ந்த மேயர் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. நாளை வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே,தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுப்பதற்காக பறக்கும் படையினரும் ஐடி அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

சந்தேகத்திற்கிடமான இடங்களில் வருமான வரித்துறை சோதனையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேயர் சுந்தரியின் கணவர் ராஜா, கடலூர் திமுக நகரச் செயலாளராக உள்ளார். மேயர் சுந்தரியின் வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அரை மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
சுமார் 10 அதிகாரிகள் இந்த சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. வருமான வரித்துறை சோதனையில் எதுவும் கைப்பற்றப்பட்டுள்ளதா? என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக சுந்தரியின் கணவர் ராஜா தெரிவித்தார்.
தாங்கள் முறையாக வருமான வரி செலுத்தி வருவதாகவும் வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறோம். அதிகாரிகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக இருக்கிறோம். எங்களிடம் ஒளிவு மறைவு இல்லை" என்று கூறினார்.
வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுகவினர் யாரும் அப்பகுதியில் பெரிய அளவில் கூடவில்லை. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடலூரில் திமுக மேயர் வீட்டில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications