ஐந்து நாட்களாக ஐடி ரெய்டு.. தனது ஓட்டுநரை அச்சுறுத்தியதாக எ.வ. வேலு பரபர பேட்டி!
சென்னை: அமைச்சர் எ.வ வேலு தொடர்பான இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வருமான வரி சோதனை குறித்து அமைச்சர் எ.வ வேலு பேட்டியளித்துள்ளார்.
கல்வித்தந்தையாகவும், ஆன்மீகவாதியாகவும் இருக்கிறார் எ.வ. வேலு. தமிழக அரசு மூலமாக நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை என 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன. பணம் அதிகம் புரளும் துறைகளை வைத்துள்ள எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமையன்று வருமான வரித்துறை சோதனை தொடங்கியது.

சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இன்று 5-வது நாளாக ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ வேலுவின் அருணை பொறியியல் கல்லூரி தொடர்புடைய இடங்களில் ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் நேற்று இரவு தகவல் வெளியாகியது. இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் எ.வ வேலு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உணவுத்துறை அமைச்சராக நான் சிறப்பாக பணியாற்றினேன். எனக்கு எதிராக ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் எனது கார் ஓட்டுனரை அச்சுறுத்தி கேள்வி எழுப்பினர். வருமான வரித்துறையினர் வெறும் அம்புதான், எய்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள். நான் வெளிநாட்டுக்காரன் இல்லை, இந்த மண்ணுக்கு சொந்தக்காரன்.
வருமான வரித்துறையினர் சோதனைக்கு நாங்கள் யாரும் அஞ்ச மாட்டோம். எங்களை பொறுத்தவரை நாங்கள் சட்டப்படி நடந்துகொள்வோம். ஏற்கனவே 2 நாள் என் வீட்டில் ரெய்டு நடத்தியதால் 2 நாட்கள் என் பணிகளை செய்ய முடியவில்லை. பாஜக கட்சியில் வருமான வரித்துறையும் ஒரு அணியாக மாறிவிட்டது. உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல பாஜகவில் ஒரு அணியாக வருமான வரித்துறை உள்ளது.
எங்களை முடக்குவதற்காகவே இந்த சோதனை நடைபெற்றது. காசா கிராண்ட், அப்பாசாமி நியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனிப்பட்ட முறையில் என் கேரக்டரை கலங்கப்படுத்த பலபேர் முயற்சி செய்கிறார்கள். அது எந்த காலத்திலும் நடக்காது. என்னை பொறுத்தவரை நான் நேர்மையானவனாக, எனது மனசாட்சிக்கு பயந்தவனாக எப்போதும் கட்டுப்பட்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications