போடு தகிட தகிட.. அடுத்த ஆக்சனுக்கு தயாரான ICF! ரெடியாகுது வந்தே பாரத் சரக்கு ரயில்! எல்லாம் மாறுதே!
சென்னை: இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய மாற்றத்துக்கு வழிவகுக்கும் முக்கிய முயற்சியாக, நாட்டின் முதல் வந்தே பாரத் சரக்கு ரயிலை அறிமுகப்படுத்தும் பணிகள் வேகமடைந்துள்ளன. சிட்டிங் மற்றும் ஸ்லீப்பர் என பயணிகள் ரயில் சேவையில் வந்தே பாரத் ரயில் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அதே தொழில்நுட்பத்தில் சரக்கு ரயில்களையும் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முதல் வந்தே பாரத் சரக்கு ரயிலின் மாதிரி (prototype) இந்த வாரம் சென்னை நகரில் உள்ள ஐசிஎஃப் (Integral Coach Factory - ICF) தொழிற்சாலையில் இருந்து சோதனைக்கு வெளியே செல்ல உள்ளது. இது இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.
சராசரியாக ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கட்டணம் பாதுகாப்பான பயணம் என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய ரயில்வே பயணிகளின் வரப் பிரசாதமாக திகழ்கிறது.

அதன் புது புரட்சியாக 2022 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. முதன்முதலாக குஜராத் காந்தி நகரில் இருந்து மகாராஷ்டிராவில் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் முதல் சேவை தொடங்கியது. நகரும் நட்சத்திர ஹோட்டல் போல இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் மேலும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக் கூடியது.
அதிவேக இண்டர்நெட், குளிர்சாதன வசதி, எல்.இ.டி டிவி போன்ற சேவைகளோடு, 24 மணி நேரமும் உணவு குடிநீர் போன்ற வசதிகளோடு பயணிகளுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிட்டிங் மற்றும் ஸ்லீப்பர் என பயணிகள் ரயில் சேவையில் வந்தே பாரத் ரயில் பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து அதே தொழில்நுட்பத்தில் சரக்கு ரயில்களையும் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது.
இதற்காக இந்தியாவின் முதல் வந்தே பாரத் சரக்கு ரயிலின் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சரக்கு ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முன் பல்வேறு கட்டாய சோதனைகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக, Research Designs and Standards Organisation (RDSO) அமைப்பு இந்த ரயிலை முழுமையாக பரிசோதிக்க உள்ளது.
இந்த சோதனைகளில் அதிர்வு சோதனை, அவசர நிறுத்த தூரம் (Emergency Brake Distance) மதிப்பீடு, முழுமையாக இயங்கும் திறன் போன்ற பல முக்கிய அம்சங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.இந்த வந்தே பாரத் சரக்கு ரயில், வழக்கமான சரக்கு ரயில்களைக் காட்டிலும் மிகவும் வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் இந்த ரயில்களில் உள்ளது.
16 பெட்டிகளைக் கொண்ட இந்த மின்சார ரயில், சுமார் 264 டன் வரை சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இயங்கும் பல சரக்கு ரயில்கள் மணிக்கு 100 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் இயங்கும் நிலையில், இந்த புதிய ரயில் சரக்கு போக்குவரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயிலின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம், குளிரூட்டப்பட்ட (temperature-controlled) கொள்கலன்களை எடுத்துச் செல்லும் வசதி என்பதாகும்.
இதன் மூலம் விரைவில் கெட்டுப்போகும் பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்கள், மருந்துகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை பாதுகாப்பாகவும் வேகமாகவும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
இதுவரை இத்தகைய பொருட்கள் பெரும்பாலும் சாலை வழிப் போக்குவரத்தையே நம்பியிருந்த நிலையில், இந்த புதிய ரயில் ஒரு மாற்று வழியை உருவாக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த ரயிலில் அகலமான தானியங்கி கதவுகள் மற்றும் காற்றழுத்த தாழ்வான தரை அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சரக்குகளை விரைவாக ஏற்றவும் இறக்கவும் முடியும். இதனால் சரக்குகள் சென்றடையும் நேரம் குறைய வாய்ப்பு உள்ளது.
இது சாலை போக்குவரத்துடன் போட்டியிடும் வகையில் ரயில் சரக்கு சேவையை மேம்படுத்தும். தற்போது கிடைத்த தகவல்களின் படி, இந்த வந்தே பாரத் சரக்கு ரயிலின் முதல் சேவை வடஇந்தியாவின் முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை பகுதிகளுக்கு இடையே முதலில் இயக்கப்படும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications