மெரினா, பெசன்ட் நகரில் குவிந்த ரசிகர்கள்.. இந்தியா- நியூசிலாந்து போட்டியை லைவில் பார்த்து உற்சாகம்
சென்னை: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணி மோதும் இறுதிப்போட்டி சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிரமாண்ட எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நேரலை ஒளிபரப்பை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கடற்கரைகளில் திரண்டு இருந்தனர். ஒவ்வொரு சிக்சர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி இன்று விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் எப்படியும் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்களும் ஆரவாரம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே நியூசிலாந்தை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இந்திய அணி இந்த முறை பைனலிலும் எளிதில் வீழ்த்திவிடும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதன் காரணமாகவே இந்த போட்டி விறுவிறுப்பு அடைந்துள்ளது. எப்படியும் இந்த முறை இந்தியா கோப்பையை வென்று விடும் என்றும் அதற்கான கொண்டாட்டங்களுக்கும் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இதேபோல் துபாயில் நடைபெறும் இந்த போட்டியை தற்போது நம் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் எல் இடி திரையில் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி இன்று நேரடி ஒளிபரப்பப்பட்டது. மதியம் போட்டி தொடங்கும் போதே ஏராளமான ரசிகர்கள் சென்னை மெரினாவில் குவியத்தொடங்கினர். தொடர்ந்து போட்டி ஆரம்பித்தது. இந்த முறையும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ்சில் தோல்வியடைந்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து இந்தியாவுக்கு 252 ரன்களை இலக்காக வைத்தது.
இதையடுத்து இந்தியா பேட்டிங் செய்ய ஆரம்பித்ததும், சென்னை மெரினா கடற்கரையில் ரசிகர்கள் கூட்டம் களை கட்ட தொடங்கியது. ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா அடித்து ஆடியதால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தற்போது இந்திய அணியும் வெற்றி பெறும் தருவாயில் உள்ளது. போட்டி துபாயில் நடந்தாலும், சென்னை மெரினாவில் போட்டி நடப்பது போல் ரசிகர்கள் விசில் அடித்தும் கை தட்டியும் ஆரவாரம் செய்கின்றனர்.
2000ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து பட்டம் வென்றது. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. இதனால் இம்முறை நியூசிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதேபோன்று, வெற்றி பெறும் தருவாயில் இந்தியா உள்ளது.












Click it and Unblock the Notifications